தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 15, 2021

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விவரம்

 





தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி இனி தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து காய்கறி, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகள் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் தேநீர்க் கடைகளுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:


''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர்

மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.


அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.


தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 30,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.


தமிழ்நாட்டில் 13.05.2021-ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த 09.05.2021 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், நேற்று (13.05.2021) நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


இன்று (14.05.2021) நான் நடத்திய கூட்டத்தில், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்தும், நோய்ப்

பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், தற்போது 10.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 15.05.2021 காலை 4 மணி முதல்

24.05.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.


புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?


* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள்

அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.


மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.


மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.


* பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்


* பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.


* காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.


* தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.


* மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.


* இ-பதிவு முறை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.


* அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ- பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.


* இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.


ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும். மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தக் கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


ஏற்கெனவே நான் பலமுறை வலியுறுத்தியவாறு ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே, நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியும்.


எனவே நேற்று (13.05.2021) நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தவாறு, காவல் துறையினர், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.


கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவேண்டும்.


பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்''.






Click Here To Download - Lockdown Press News 14.05.2021 - Pdf




Post Top Ad