‘2வது தவணை கொரோனா நிவாரண நிதி 2000 - ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் - தமிழக முதல்வர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 22, 2021

‘2வது தவணை கொரோனா நிவாரண நிதி 2000 - ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் - தமிழக முதல்வர்

 







‘2வது தவணை கொரோனா நிவாரண நிதியாக  2 ஆயிரம் ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும்’’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி என்.ஐ.டி.யில் 320 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நல வாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 



இதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற பின்பு தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முதலாக திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். 


அதில் பெருமையாக உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பரவல் கிடையாது. தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை அடையாளம் காணப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மருந்துகள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது.



தமிழகத்தில் 10 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கோவையில் அந்த சூழல் இல்லை. கோவை மாவட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து செல்பவர்கள் உள்ளனர். குறிப்பாக, காய்கறி வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. 


எனவே இன்னும் கட்டுபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து நாளை (இன்று) அனைத்து கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் ஆலோசனை நடத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.



தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரேசன் கார்டுதார்களுக்கு  4 ஆயிரம் வழங்கப்படும் என கூறி முதற்கட்டமாக 2 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 2 ஆயிரம் ஜூன் மாதம் 3ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மத்திய அரசு சில மாநிலங்களுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் வழங்குகிறது. மற்ற மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. நான் பிரதமருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறியுள்ளார். 


நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லிக்கு சென்று நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். ஓடிசாவில் புயல் வரலாம் என்ற நிலை உள்ளது. எனவே ஒடிசாவில் இருந்து வரும் ஆக்சிஜன் தடைபட்டு விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை பணிகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள்தான் குறைந்த அளவில் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்திற்கு தேவையான அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை. 



இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த அறிவிப்பு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். கொரோனா குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3வது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.


தமிழகத்திற்கு 470 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை, இதில் 400 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் இங்கேயே கிடைக்கிறது. மீதமுள்ள தேவை ஒடிசாவின் ரூர்கோலா, ஜாம்ஷெட்பூர் ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்டுள்ளது. அதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சாலையில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஜீரோ டிலே வார்டு திறந்து நோயாளிகள் வேனில் காத்திருக்காமல் வார்டில் அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஜீரோ டிலே வார்டில் 136 படுக்கை நாளை (இன்று) தொடங்கப்படவுள்ளது.



தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு நடத்தப்படுவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னர், டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் திட்டங்கள் கேட்டு பெறப்படும். 


தமிழகத்தில் ஆம்புலன்ஸ்க்கு மாற்றாக இனோவா கார்களை ஆம்புலன்ஸாக மாற்றுவது நடந்து வருகிறது. இதில் 37 ஆயிரம் கார்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டதை அறிந்து மத்திய அரசு பாராட்டி உள்ளது. இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். திருச்சி மற்றும் ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கப்பட்டு இன்னும் 30 நாட்களில் ஆக்ஸிஜன் கிடைக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.




Post Top Ad