தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 22, 2021

தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்!

 



தமிழகத்தில் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது. 





ஒரு பள்ளி அல்லது ஒரு கல்லூரியை வாக்குப்பதிவு மையம் என்று அழைக்கிறார்கள். இதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் பதவி நிலை ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் நான்கு பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது சின்னங்கள் உள்ளிட்ட விவரங்கள் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்பட்டிருக்கும்.



வாக்குச் சாவடி மையங்களுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, அதற்கான பூத் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பெண் ஊழியர் ஒருவரை பணியில் ஈடுபடுத்தும்.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அச்சுப் பதிவு இயத்திரம் ஆகியன வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.


நிலை ஒன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களுடைய அடையாள அட்டையை சரி பார்த்தப் பின்னர் வாக்களிக்க அனுமதிப்பார். நிலை இரண்டில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டை குறித்த விவரங்களை பதிவு செய்துகொண்டு, அதற்கான படிவத்தில் வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பார்.




நிலை மூன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் கைவிரலில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதிப்பார். இவை அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரங்களை தெரிந்துவைத்துள்ள நபராக வாக்குப்பதிவு தலைமை அலுவலர் இருப்பார்.






இத்தகைய தேர்தல் பணிகளில் காலமுறை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களை தேர்தல் ஆணையம் முழுமையாக பயன்படுத்துகிறது. இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். அதிலும், குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என இருந்தது. அது, பின்னர் 59 என்றும், 60 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்து வரும் அரசு ஓய்வு பெறும் வயதை 61 உயத்திவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டாலும் அரசு அதனை தர மறுக்கிறது என வேதனைப்படுகின்றனர். 50 வயதை கடந்த பெரும்பாலான அரசு ஊழியர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.



ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்ந்து 35 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்காக, 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தாங்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிக்கு வெளியே, வேறு ஒரு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப் பெட்டிகளை முறையாக ஒப்படைத்துவிட்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்.



தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு உணவு, மருத்துவம், தூங்கும் வசதியுடன் கூடிய தங்குமிடம், சுத்தமான கழிப்பிடம், குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. இவற்றுக்காக சில இடங்களில் அங்குள்ள அரசியல் கட்சியினரை சார்ந்து தேர்தல் பணிசெய்யவேண்டிய நிலை அரசு ஊழியர்களுக்கு எழுகிறது.


அதேபோல உடனடியாக வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்வதற்கும், நள்ளிரவு பணி முடித்து வீடு திரும்புவதற்கும், போதுமான போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை. இதில் பெண்களும், கர்ப்பிணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



'இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களையும், கர்பிணிகளையும் ஈடுபடுத்தக்கூடாது. வாக்குச் சாவடிக்கு வெளியே பெண் ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது. பூத் சீட்டு கொடுப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க காவல்துறையினரை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Post Top Ad