TNPSC : குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை இணைக்கக் காலக்கெடு நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 27, 2020

TNPSC : குரூப்-1 தேர்வு ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை; ஆதாரை இணைக்கக் காலக்கெடு நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 






குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் எண் தேவையில்லை என்றும், ஆதார் எண்ணை இணைக்கக் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தேர்வர்கள் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்தபிறகே போட்டித் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.


ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்ததால், தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.



இந்நிலையில், ஜன.3ஆம் தேதி நடக்க உள்ள குரூப் -1 முதல் நிலைத் தேர்வு, ஜன.9, 10ஆம் தேதிகளில் நடக்க உள்ள உதவி இயக்குனர் (தொழில், வணிகத் துறை) பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டைத் தரவிறக்கம் செய்ய ஆதார் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


அதேபோல தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒரு முறைப் பதிவு மற்றும் நிரந்தரப் பதிவில், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.



இது தொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad