பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 8, 2020

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள்

 





பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


வேலைவாய்ப்பு அலுவலக மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியது. தமிழகத்தில் மாறி மாறி வரும் அரசுகள், ஆசிரியர் நியமனத்தில் கொள்கை விளக்கம் என்று கூறி அதிமுக அரசு பதவி ஏற்கும் போதெல்லாம் தகுதித்தேர்வு என்றும், திமுக அரசு பதவி ஏற்கும் போதெல்லாம் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் அதிமுக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு நடத்தி, தேர்வு செய்து வருகிறது. அதிலும் குழப்பம் ஏற்பட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மறுபடியும் போட்டித் தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணி என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது தேவையானதா அல்லது வேலைவாய்ப்பு அலுவலகமே தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.




பட்டப்படிப்பு முடித்து பிறகு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அனைத்து பயிற்சிகளையும் பெற்று பிஎட் பட்டம் பெற்றவர்களை, மேலும் தகுதித் தேர்வு போட்டித் தேர்வு என எழுத வைத்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடிகள் அரங்கேறி உள்ள நிலையில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் டிஎன்பிஎஸ்சி மேல் நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது. ஆசிரியர் தேர்வு முறையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்.



கடந்த கால 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மாநில செயற்குழு கூட்டி, அதில் முடிவெடுக்கப்படும். அதன்பிறகும் தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Post Top Ad