நிறுத்தப்பட்ட பஞ்சப்படி வழங்கவேண்டும், ஏன்? - Asiriyar.Net

Post Top Ad


Thursday, December 31, 2020

நிறுத்தப்பட்ட பஞ்சப்படி வழங்கவேண்டும், ஏன்?

 பஞ்சப்படி என்பது பணவீக்கம் ஏற்படும் போது அரசு ஊழியர்களுக்கும், பொது துறை ஊழியர்களுக்கும், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் வழங்கப்படுவதேயாகும்.பணவீக்கத்தின் பாதிப்பிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க பஞ்சப்படி அடிப்படை சம்பளத்தின் சதவிதமாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சப்படி வாழ்விடத்திற்கு ஏற்ப மாறுபடும். பஞ்சப்படி வருமான வரி விதிப்பில் கணக்கிடப்படும்.இரண்டாம் உலகப்போரில் “உணவு” ப்படியாக வழங்கப்பட்டது. 1947ல் ஜவுளிப்படியாக வழங்கப்பட்டது. 1953ல் திருத்தப்பட்டு ஜவுளிப்படியாக வழங்கப்பட்டது. தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டு வழங்கும்முறையும் உள்ளது.  நுகர்வோர் விலைக்குறியீடு 8 புள்ளிகள் உயர்ந்தபோதெல்லாம் பஞ்சப்படி உயர்த்த மத்திய ஊழிய ஆணையம் பரிந்துரைத்தது. 01.01.1973-முதல் பஞ்சப்படியின் அளவு 100% முதல் 35% வரை இருந்தது.

4வது மத்திய ஊழியக்குழுவானது (1986) சதவீத முறையில் ஆண்டுக்கு இரண்டுமுறை பஞ்சப்படி வழங்க பரிந்துரை செய்தது. இதன்படி ஜனவரி 1 மற்றும் சூலை 1 தேதிகளில் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அகில இந்திய நுகர்வோர் விலைக்குறீட்டின் அடிப்படை (1960) 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பு குறித்து ஒவ்வொரு தவணை பஞ்சப்படி கணக்கிடப்படவேண்டும் என பரிந்துரை செய்தது. மேலும் அடிப்படை ஊதியத்தைவிட 50% பஞ்சப்படி அதிகரிக்கும்-பொழுது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
கொரோனாவின் தாக்குதல்


2020- மார்ச் 24ல் ஏற்பட்ட கொரோனா வேகமாக பரவத்தொடங்கிபோது கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் அளிக்கவும், பாதிக்கப்படாதவர்களை பரவலிலிருந்து காப்பற்றவும் எவ்வளவு செலவு ஆகும் என்பதும் யாராலும் கணிக்கப்பட முடியாமலிருந்தது. அதற்காகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக  மோடி அரசும், எடப்பாடி அரசும் சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை முடக்கியது. மத்திய அரசு தன்னுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூடுதல் பஞ்சப்படியை ஜனவரி 2020 முதல் ஜுன் 2021 வரையிலான ஒன்றரை வருட காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கூடுதல் பஞ்சப்படியை நிறுத்தி வைக்கும் ஆணையை பிறப்பித்தது. ஆனால் நிலைமை தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சீரடைந்து வருகிறது. சில வாரங்களில் கொரோனவின் தாக்கத்திற்கு ஊசி மருந்தும், சந்தைகளில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் ஒத்துழைப்பால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.கொரோனாவிக்கு முந்தைய செயல்பாடுகளில் 90 சதவீதம் நடைமுறைக்கு வந்துவிட்டது. தேர்தலையொட்டி என்றுமில்லாத வகையில் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2500/- வழங்க ரூ.5604 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-2019-ஆம் நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசு ரூ.31157 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரூ.1000 கோடி சொத்து உடையவர்களுக்கு 2% சதவீதம் செல்வவரி விதிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் வரியாக பெற முடியும். பத்திரப்பதிவு வருவாய் அதிகரித்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும் பஞ்சப்படி வருமானவரி செலுத்தும்பொழுது கணக்கிடப்படுகிறது.

இச்சுழலில் தமிழக அரசு அறிவித்துள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படும் நிலுவையிலுள்ள பஞ்சப்படி முடக்கத்தை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துள்ளது. வருமானவரி செலுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, காப்பீட்டிலோ அஞ்சலக சேமிப்பிலோ ஒரு பகுதியை சேமிக்கவேண்டும். எந்த வகையிலும் பார்த்தாலும் இவர்களது பஞ்சப்படி நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் பங்கு பெறுகிறது.சமீபத்தில் ஏற்பட்ட ‘புரெவி’ புயலில் அரசுத்துறை ஊழியர்களும், முன் கள வீரர்களாகப் பணியாற்றியதை பார்த்தோம். வரும் தேர்தல் காலங்களில் ஆண், பெண் ஊழியர்கள் என்ற பேதமின்றி பலரும் ஒரு சில நாட்கள் தங்களது குடும்பத்தை விட்டுப்பிரிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இரவுப்பகலாக பணிபுரிவதையும் அறிவோம். ஆவின், கூட்டுறவு உள்ளாட்சி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் / மருத்துவ பணியாளர்கள் தங்கள் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் பணியாற்றியதை பார்த்தோம். பலர் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர். 

தமிழக அரசு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு 2020-மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூ.20,000/- இருந்த ஓய்வூதியம் ரூ.25,000/- உயர்த்தி உள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து இருந்தால் ஓய்வூதியம் ரூ.10000/- அதிகரிக்கப்-பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பின் பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருவதைப் போன்று அரசு ஊழியர்களுக்கும், பொது துறை ஊழியர்களுக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கட்டுரையாளர் : ஜி.எஸ். அமர்நாத், தலைவர்,தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் (சிஐடியு)

Recommend For You

Post Top Ad