பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 3, 2020

பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் ஆலோசனை

 






நவ16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.


 கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

 

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கரோனா தொற்றின் வேகம் குறைவதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்துக் கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளில் 9,10,11,12 -ம் வகுப்புகள், கல்லூரிகள் ஆகியவற்றை நவம்பர் 16-ம் தேதி முதல் திறக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்தது.

 



எனினும் பண்டிகைக் காலம் மற்றும் பருவமழைக் காலம் என்பதால் கரோனா தொற்று அதிகரிக்கலாம் எனப் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். கரோனா இரண்டாம் அலை உருவாகலாம் என்று பல்வேறு நாடுகளைச் சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகள் திறப்பைத் தள்ளிப் போட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் ஐஏஎஸ், முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சிஇஓக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 



பள்ளிகளைத் திறப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரண்டாம் அலை குறித்த அச்சம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், பாடத்திட்டக் குறைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 


முன்னதாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனது துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad