கொரோனா பரவல் முடிவுக்கு வரும் முன்னரே மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 5, 2020

கொரோனா பரவல் முடிவுக்கு வரும் முன்னரே மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

 


தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில், பள்ளிகளை திறப்பது 2வது அலைக்கு வழிவகுக்கும் என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், நோய் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாள்தோறும் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், வரும் 16ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய் பரவல் முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில், பள்ளிகளை திறக்கும் முடிவு ஆபத்தானது என எதிர்க்கட்சியினர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருவதால், பெற்றோர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது. 
பள்ளிகள் திறப்பே கொரோனா இரண்டாவது அலைக்கு காரணமாகி விடக்கூடாது என நினைக்கும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அத்தகைய பாதிப்பு வரலாம் என உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் பள்ளிகளை திறப்பது தமிழகத்தில் இரண்டாவது அலைக்கு வாய்ப்பாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஸ்சில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் எங்கும் அதனை பின்பற்றாமல், கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். பள்ளிகளை திறந்தால், 80 சதவீத மாணவர்கள் பஸ்சில் தான் வந்தாக வேண்டும். அப்போது எளிதில் நோய் தொற்ற வாய்ப்புள்ளது. பள்ளி மாணவர்கள் 7 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்திப்பதால், ஆர்வத்துடன் உரையாடுவார்கள். 
அப்போது மாஸ்க் அணியவோ, சமூக இடைவெளியை கடைபிடிக்கவோ வாய்ப்பில்லாமல் போகும். அத்துடன், வரும் நாட்கள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய் பாதிப்பு மாணவர்களுக்கு வர நேரிடும். அவர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில்,எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவல் ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது.
நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும், அவர்கள் மூலமாக வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால் தான்,நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் அதே நிலை நேர்ந்தால்,பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, தமிழகத்தில் பள்ளிகளை திறக்கும் முடிவை,பள்ளிக்கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.

Post Top Ad