இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 20, 2020

இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது?

 




கொரோனா நோய் பரவல் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், காலாண்டு தேர்வை போல, இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும், ரத்து செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச், 24ல், பள்ளிகள், கல்லுாரிகள் என, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு அமலில் இருந்தாலும், தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இம்மாதம், 31ம் தேதி வரை அமலில் உள்ளது.




கடைகள் திறப்பு, பஸ்கள் இயக்கம் என, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பள்ளிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் திறக்க, அனுமதி அளிக்கவில்லை.பள்ளி திறப்பு எப்போது?இதனால், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறக்கப்படாமல், 'ஆன்லைன்' வழியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.



எனினும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோரிடம் ஏற்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது; அவர்களுக்குரிய பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிஉள்ளது. 


அதனால், 'முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன், பள்ளிகளை திறந்து கொள்ளலாம்; இது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்' என, மத்திய அரசு தெரிவித்தது.அதன் அடிப்படையில், சில மாநிலங்களில், 


பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. பாடத் திட்டம் குறைப்புதமிழகத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள், பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதா என, அடுத்த மாதம், 11ம் தேதிக்குள், அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இது தொடர்பாக, நேற்று சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன், ஆலோசனை நடத்தினார்.



இக்கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், இயக்குனர் கண்ணப்பன், கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விபர அறிக்கை, அமைச்சரிடம் வழங்கப்பட்டது.


 அதேபோல், நீட் இலவச பயிற்சி வகுப்பு துவங்குவது; பொதுத் தேர்வை எப்போது நடத்துவது; பாடத் திட்ட குறைப்பு முடிவை எப்போது அறிவிப்பது; 


இலவச நலத்திட்ட உதவிகளுக்கு, 'டெண்டர்' விடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.பாடத் திட்ட குறைப்பை பொறுத்தவரை, 'அறிக்கையை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், முதல்வர் ஒப்புதல் அளித்தால் வெளியிடலாம்; இல்லாவிட்டால், தற்போதுள்ள முறைப்படி பாடங்களை வரிசையாக நடத்தட்டும்.'



சூழ்நிலைக்கு ஏற்ப பாடக் குறைப்பை அறிவிக்கலாம்' என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதிகம் பரவும் ஆபத்துஏற்கனவே, செப்டம்பரில் காலாண்டு தேர்வை நடத்தாத நிலையில், டிசம்பரில் நடத்த வேண்டிய, அரையாண்டு தேர்வையும் ரத்து செய்யலாம் என, இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


 நவம்பர், டிசம்பர் பண்டிகை காலமாக இருப்பதால், கொரோனா வைரஸ் அதிகம் பரவும் ஆபத்து உள்ளதால், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.



பிளஸ் 2 பொதுத் தேர்வை பொறுத்தவரை, சில வாரங்கள் கழித்து, தேதியை நிர்ணயிக்கலாம் என, யோசனைகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, ஜனவரிக்கு பின், சூழலை பொறுத்து, இறுதி ஆண்டு தேர்வை மட்டும் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.




அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆலோசனை கூட்டம் முடிந்த பின், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை.



பள்ளிகளை திறப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆலோசனை தொடரும்; அதன்பின், முடிவு செய்யப்படும்.



 அதை, முதல்வர் அறிவிப்பார்.நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புககளை, டிசம்பர் முதல் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை குறைப்பது தொடர்பாகவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


பாடத் திட்டங்களை குறைத்து, மாணவர்களுக்கு, 'புளு பிரின்ட்' வழங்குவது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசித்து, 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad