மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ' ஆசிரியர் தின ' வாழ்த்துச் செய்தி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 4, 2020

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ' ஆசிரியர் தின ' வாழ்த்துச் செய்தி!

 




அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள், என்று  முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொட்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை எஸ்.ராதாகிருஷ்ணனை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஒளவையார், உடலுக்குக் கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.


ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது', சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவித்து வருகிறது.


நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் எனது உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.





Post Top Ad