New Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 30, 2020

New Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம்!







புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை, 1 - 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.

* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்

* புதிய திட்டத்தின்படி, மாணவ - மாணவியர், 3 - 8 வயது வரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 - 11 வயது வரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 - 14 வயது வரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 - 18 வயது வரை, உயர் நிலைப் பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலைப் பள்ளி கல்வி இருக்கும்

* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப் பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூக சேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்


* மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்து கொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்

* தொழிற் கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில் கல்வி முறையே இருக்கும்

* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது

* மும்மொழி திட்டத்தில், ஒரு பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.

உயர் கல்வியில் மாற்றம்:

உயர் கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பி படிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' எனப்படும், தேசிய திறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்

* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்த நேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்

* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம் தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும். இதற்கு மேலும், உயர்கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டு படிப்பை தொடரலாம்

* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்கும்

* புதிய கல்விக் கொள்கையின்படி, இணைப்பு கல்லுாரிகள் என்ற முறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்

* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும்

* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது


* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்

* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்

* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்

* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழி கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்

கட்டணத்தில் வெளிப்படை:

கல்வி கட்டணம் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தாங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கும் தணிக்கை செய்யப்படும். லாப நோக்கம் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் லாபத்தையும், கல்வி நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, விசாரிக்க, ஒரு புதிய வழிமுறை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad