தொடக்கக் கல்வி அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை - ரூபாய் 3.79 லட்சம் அபராதம் - நீதிமன்றம் தீர்ப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, July 18, 2020

தொடக்கக் கல்வி அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை - ரூபாய் 3.79 லட்சம் அபராதம் - நீதிமன்றம் தீர்ப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 1993-95 கல்வி ஆண்டின் போது உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியில் இருந்தவர் தற்போது 73 வயதுள்ள ரகுபதி. இளநிலை உதவியாளர் அமானுல்லா பாலி, அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் இவர்கள் சேர்ந்து உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணி செய்து வந்த ஆசிரியர்கள் 68 பேருக்குச் சேரவேண்டிய சம்பள பணம் 7,40,087 ரூபாய் கையாடல் செய்துள்ளனர்.இது சம்பந்தமாக புகார்கள் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். அதையடுத்து அப்போதைய மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக உளுந்தூர்பேட்டை தொடக்கக் கல்வி அலுவலகம் சென்று ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வின் முடிவில் ஆசிரியர்களின் சம்பளப் பணம் கையாடல் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்படி மூவர் மீதும் ஊழல் தடுப்பு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறை இவர்கள் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

அப்போதைய தென்னாற்காடு மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக இருந்த முகமது பஷீர் அவர்கள் தீவிர விசாரணை செய்து மேற்படி மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அந்த வழக்குத் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. தற்போது விழுப்புரம் ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அந்தத் தீர்ப்பில் மேற்படி மூவரும் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளத்தைக் கையாடல் செய்த உதவி தொடக்க கல்வி அலுவலர் ரகுபதிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 3.79 லட்சம் அபராதமும், இளநிலை உதவியாளர் அமானுல்லாவிற்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 1.82 லட்சம் அபராதமும், தலைமையாசிரியர் கண்ணனுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 2.70 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த ஊழல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. தவறு செய்தவர்கள் ஆண்டுகள் பல கடந்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு உதாரணம் என்கிறார்கள் இதில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள். அவர்களின் பெரும்பாலோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இருந்தும் அவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

Recommend For You

Post Top Ad