அனைத்து சனிக்கிழமையும் இனி வேலை நாள் - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Saturday, May 16, 2020

அனைத்து சனிக்கிழமையும் இனி வேலை நாள் - தமிழக அரசு உத்தரவுதமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் வருகிற 18ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்றும், அனைத்து சனிக்கிழமையையும் வேலைநாட்களாக அறிவித்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் வருகிற 17ம் தேதி (நாளை) வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பஸ், ஆட்டோ டிரைவர்கள், கண்டக்டர் உள்ளிட்ட அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.

அத்தியாவசிய பணிகளில் உள்ள சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், போலீஸ் துறையில் உள்ளவர்கள் தற்போது வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் சில அரசு துறைகளில் 33 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் குறைந்த அளவு (33 சதவீதம்) ஊழியர்களை வைத்து செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பஸ், ஆட்டோ போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் உள்ளனர்.

அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நாளையுடன் (17ம் தேதி) முடிவடைய உள்ளது. இதையடுத்து 4வது கட்டமாக வருகிற 18ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனாலும், கூடுதலாக சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 18ம் தேதி (நாளை மறுதினம்) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:


* ஊரடங்கு காலத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிக்காக 33 சதவீத பணியாளர்களுடன் வேலைகள் நடந்து வந்தது.

* 18.5.2020 (நாளை மறுதினம், திங்கள்) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகம் செயல்பட வேண்டும். பணியின்போது சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எல்லா அரசு அலுவலகத்திலும் 50 சதவீத ஊழியர்கள் வைத்து பணிகளை செய்ய வேண்டும்.

* அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை துறை தலைவர்கள் 2 பிரிவாக பிரித்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் ஒரு பிரிவினர் பணிக்கு வர வேண்டும். புதன் மற்றும் வியாழன் 2வது பிரிவினர் பணிக்கு வர வேண்டும். இதை சுழற்சி முறையில் அப்படியே கடைபிடிக்க வேண்டும்.

* அரசாங்கத்தில் சில செயல்பாடுகள் வருகிற 18ம் தேதி முதல் கொண்டு வரப்படும். அதன்படி விடுபட்ட விடுமுறையை சரிசெய்ய வாரத்தின் 6 நாட்கள் இனி அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

* சுழற்சி முறையில் ஊழியர்கள் 50 சதவீதம் பேருடன் பணியாற்றினாலும், அவசிய தேவைக்காக வீட்டில் இருக்கும் அரசு பணியாளர்களை துறை தலைவர்கள் பணிக்கு அழைக்கும்போது அவர் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்.

* ஏ குரூப் அதிகாரிகள், தலைமை பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைத்து நாட்களும் (6 நாட்களும்) வேலைக்கு வர வேண்டும்.

* பணியில் இருக்கும் துறை அதிகாரிகள் கோப்புகளை சமர்ப்பிக்கும் முடிவுகளை எடுக்கலாம்.

* வீட்டில் இருக்கும் பணியாளர்கள், அதிகாரிகளும் பணி சம்பந்தமாக சந்தேகங்களை தீர்க்க தொலைதொடர்பு சாதனங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.


* சென்னை, தலைமை செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

* தேவைப்பட்டால் அரசு ஊழியர்கள் பணிக்கு வர பஸ் போக்குவரத்து செய்து தரப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை இதை அனைத்து அரசு ஊழியர்களும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் நகல் அனைத்து அரசு துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து அரசு துறையின் தலைமை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், நீதிமன்றங்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலக பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad