ஓய்வுபெறும் வயது 59 -ஆக உயர்வு..! - பணப்பலன்களும் பாதிப்புகளும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 18, 2020

ஓய்வுபெறும் வயது 59 -ஆக உயர்வு..! - பணப்பலன்களும் பாதிப்புகளும்!




பணிக்காலம் ஓராண்டு அதிகரிப்பதால், அதற்கேற்ப பென்ஷன், கிராஜுவிட்டி, கம்யூடேஷன், விடுப்புச் சம்பளம் முதலானவை அதிகரிக்கும்.

ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 1998-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தங்களின் ஓய்வுபெறும் வயதையும் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்து வந்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59-ஆக உயர்த்த தமிழக அரசாங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

`கொரோனாநோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏற்கெனவே காலியாக இருக்கும் அரசு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடியாத நிலை இருப்பதால், தமிழக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்’ என்ற பேச்சு அடிபடுகிறது.

தவிர, `தமிழக சட்டமன்றத்துக்குக் கூடிய விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதை மனதில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசாங்கம் எந்தக் காரணத்துக்காக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்களுக்கு ஏற்படப் போகும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பலன் யாருக்கு?

* 02.05.1962-க்குப் பிறகு பிறந்து, தமிழக அரசுப் பணியில் இணைந்துள்ள / இணையப்போகும் அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமான பணப்பலன் கிடைக்கும்.



* 2020, மே-ல் ஓய்வுபெறவிருந்த ஊழியர் மேலும் ஓராண்டுக்குப் பணியில் நீடிப்பதால், ஓராண்டுக் காலம் பென்ஷன் பெறுவதற்கு பதிலாக முழுச் சம்பளம் பெறுவார்.

* பணிக்காலம் ஓராண்டு அதிகரிப்பதால், அதற்கேற்ப பென்ஷன், கிராஜுவிட்டி, கம்யூடேஷன், விடுப்புச் சம்பளம் முதலானவை அதிகரிக்கும்.

* சம்பள உயர்வு கூடுதலாக ஒரு முறை கிடைக்கும் என்பதால், இதன் மூலமாகக் கிடைக்கும் ஓய்வுக்கால பணப்பலன்கள் பெரிய அளவில் அதிகரிக்கும்.

* ஆண்டுக்கு ஒருமுறை ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறும் சலுகை 27.04.2020 முதல் ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

31.05.2021-க்குள் மீண்டும் சலுகை வரப்பெற்றால், அரை மாத விடுப்புச் சம்பளம் பெறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

* பொது வருங்கால வைப்புநிதியின் இறுதி வரைவுத் தொகை (Final With Drawl) அதிகரிக்கும்.

* இன்றைய நிலையில், 30 வருடப் பணியை (Service Period) நிறைவு செய்து, ரூ.90,000 அளவுக்கு அடிப்படைச் சம்பளம் பெற்றுவரும் பென்ஷனுக்குரிய ஊழியர் ஒருவர், மேற்கண்ட கூடுதல் வாய்ப்பு காரணமாக தனது ஓய்வுக்கால பணப்பலனில் சுமார் ரூ.11.12 லட்சம் அதிகமாகப் பெறக்கூடும். (காண்க: அட்டவணை).

* அடிப்படைச் சம்பளம் கூடுதல் குறைவைப் பொறுத்து உபரியான ஓய்வுக்கால பணப்பலனும் மாறக்கூடும்.

கான்ட்ரிபியூட்டரி பென்ஷன் ஸ்கீம் ஊழியர்

* 01.04.2003-க்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் கிடையாது. பங்களிப்பு பென்ஷன் (CPS - Contributory Pension Scheme) மட்டும்தான் கிடைக்கும். தற்போது ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுவிட்டதால், கீழ்க்கண்ட கூடுதல் பணப்பலன்கள் இவர்களுக்குக் கிடைக்கும்.

* 2020, மே-யிலேயே ஓய்வு பெற்றிருந்தால் அதன் பிறகு பென்ஷனோ, சம்பளமோ பெற்றிருக்க முடியாது. பணி நீட்டிப்பு காரணமாக ஓராண்டுக் காலம் சம்பளம் பெறும் வாய்ப்பிருக்கிறது.

* சம்பளத்திலிருந்து ஒரு மாதத்துக்கு 20% தொகை பங்களிப்பு பென்ஷன் நிதியத்துக்குப் போவதால், ஓராண்டுப் பணியில் வட்டியுடன் சுமார் இரண்டரை மாதச் சம்பளம் பென்ஷன் நிதியத்தில் அதிகரிக்கும். முதிர்வுத் தொகை கணிசமாக உயரும்.

பாதிப்பு யாருக்கு?

* பதவி உயர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தவர்கள் மேலும் ஓராண்டு காத்திருந்து பதவி உயர்வு பெற வேண்டியிருக்கும்.

* இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அதாவது, உயர்பதவியில் உள்ளவர் ஓய்வு பெற்றால்தான் கீழ் நிலைப் பதவியில் உள்ளவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்பது கிடையாது. பணியிடம் காலியாக இருந்தாலே பதவி உயர்வு கிடைக்கக்கூடும். பணியிலிருந்து ஓய்வு பெறுவது தவிர, வேறு பிற காரணங்களாலும் காலிப் பணியிடம் ஏற்படலாம். பதவி உயர்வு வாய்ப்பும் கிட்டலாம்.

* சிலருக்கு தனது உடல்நிலை காரணமாகவோ, குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ உரிய தேதியில் ஓய்வுபெறுவது அவசியமாக இருந்திருக்கலாம் அல்லது மகனின் வேலை வாய்ப்புக்கோ, மகளின் திருமணத்துக்கோ, ரிடையர்மென்ட் தேதியின் அடிப்படையில் பணக் கணக்கு போட்டு வைத்திருப்பவர்களும் இருக்கக்கூடும். இப்போது ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டிருப்பதால், இவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்படலாம். இத்தகைய நிலையில் உள்ளோர் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். ஓய்வுக்கால பணப்பலன்களையும் பெறலாம்.

ஆனால், ஒரு நிபந்தனை இவர்களுக்கு விதிக்கப்படுகிறது. மூன்று மாத அவகாசம் கொடுத்த பிறகுதான் விருப்ப ஓய்வு அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்த பிறகுதான் பென்ஷன் பேப்பர்களை மாநிலக் கணக்காயருக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம் அனுசரித்தே விருப்ப ஓய்வு முடிவை எடுப்பது அவசியம். அத்துடன் இடதுபக்கத்தில் மேலேயுள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கும் கூடுதல் பணப்பலன்களையும் பரிசீலித்து முடிவெடுப்பது முக்கியம்.

* ‘இதற்குமேல் பணியில் தொடர்வதற்கான உடல்தகுதியை ஊழியர் இழந்துவிட்டார்’ என்று மருத்துவக்குழுவால் சான்றளிக்கப்பட்ட ஊழியர், இயலாமை (Inability) காரணமாக ஓய்வு பெற பணி நீட்டிப்பு ஆணையால் எந்தத் தடையும் கிடையாது.

வேலைவாய்ப்பு

* இளநிலை உதவியாளர், தட்டச்சர், காசாளர், சுருக்கெழுத்தர் போன்ற தொடக்க நிலை (Feeder Category) பதவிகளுக்கான வேலை வாய்ப்பில், ஓய்வுபெறும் வயது உயர்வு காரணமாக பாதிப்பு இருக்காது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்பது ஆறுதலான விஷயம்.

* துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வேலைவாய்ப்பு அலுவலர், உதவி வணிக வரி ஆணையர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற உயர்நிலைப் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் மட்டுமன்றி, நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. தற்போதைய நிலையில், நேரடி நியமனமும்கூட தடையின்றி நடைபெறக்கூடும்.

மறுவேலை வாய்ப்பு

அரசு ஊழியர்களைப்போல் ஆசிரியர்களும் 58 (தற்போது 59) வயது முடிந்ததும் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால், ஓய்வு பெற்றதும் வீட்டுக்குச் சென்றுவிட மாட்டார்கள். மறுநாள் முதல் மீண்டும் பணியில் தொடர்வார்கள். அதாவது, ஓய்வுபெற்ற மறு மாதம் முதல் அடுத்து வரும் மே மாதம் வரை - கல்வியாண்டு முடியும் வரை - பணியில் இருப்பார்கள். இதற்கு `மறுவேலை வாய்ப்பு’ (Re-employment) என்று பெயர்.

இதன்படி கடந்த 2019, ஜூன் முதல் 2020, ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 2020, மே முடிய மறு வேலைவாய்ப்பில் இருப்பார்கள் 31.05.2020 அன்று ‘முழுமையாக’ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தற்போதைய ஓய்வுபெறும் வயது ஆணை பொருந்தாது.

அரசின் நிதிச்சுமை குறையும்!

ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான தமிழக அரசின் ஓய்வூதியப் பலன்களுக்கான செலவில் சுமார் 6,000 கோடி அளவுக்குக் குறையக்கூடும்.

எப்படியென்றால், ஓய்வுக்கால பணப்பலன்களான கிராஜுவிட்டி, பென்ஷன் கம்யூடேஷன், இறுதி விடுப்பு ஒப்படைச் சம்பளம் ஆகிய மூன்றும் ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாதச் சம்பளத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.

தற்போதைய நிலையில், ஓய்வுபெறும் ஊழியர்களின் ‘சராசரி’ கடைசிச் சம்பளம் சுமார் ரூ.60,000 என வைத்துக் கொண்டால், ஒருவருக்குத் தர வேண்டிய ஓய்வுகாலப் பயன் 24 லட்சம் ரூபாயாக இருக்கும். 40 மாதக் கடைசிச் சம்பளம்... அதாவது,

கிராஜுவிட்டி - 15 மாதச் சம்பளம்

கம்யூடேஷன் - 15 மாதச் சம்பளம்

விடுப்புச் சம்பளம் - 10 மாதச் சம்பளம் என மொத்தம் 40 மாதச் சம்பளம் தரப்படும்.

நடப்பு ஆண்டில் 30,000 பேர் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 25,000 பேர் பழைய பென்ஷனுக்குத் தகுதியானவர்கள் என்று கணக்கிட்டால், 24 லட்சம் x 25,000 = 6,000 கோடி.

அரசு ஊழியர் தவிர...

அரசு ஊழியர், ஆசிரியர் மட்டுமன்றி உதவி பெறும் பள்ளி, கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், வாரியத்தினர், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பதால் பெரிதும் பலனடைவார்கள்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஓராண்டு இப்போது நீட்டிக்கப் பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களைப் போல, தமிழக அரசு ஊழியர்களுக்கும் கொண்டுவந்தால், இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்!

ஓய்வுக்கால பணப்பலன்... எப்படித் திட்டமிடுவது..?

‘‘30, 40 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் பணத்தைச் சரியாக நிர்வகிப்பது எப்படி என்பது ஓய்வு பெறும் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். ஓய்வு பெறும்போது மொத்தமாகக் கிடைக்கும் தொகையை எப்படி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது மிக மிக முக்கியம். இந்தத் தொகை வந்ததும், சிலர் தாங்கள் வெகு நாளாக ஆசைப்பட்ட ஒன்றை வாங்க விரும்புவார்கள்.

உதாரணமாக, கார் வாங்குவது, வீடு வாங்குவது, உலகச் சுற்றுலா செல்வது போன்றவை. இன்னும் சிலர் தங்கள் மகனையோ, மகளையோ வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்காக அனுப்பச் செலவிடுவார்கள். அதேபோல் சிலர் குழந்தைகளின் திருமணத்துக்கு பெருவாரியாகச் செலவு செய்ய நினைப்பார்கள். சிலர் ரிட்டையர்மென்ட் பணத்தை வைத்து தொழில் தொடங்க ஆசைப்படுவார்கள். சிலர் பங்கு வர்த்தகத்தில் அல்லது ஊக வணிகத்தில் ஈடுபட ஆசைப்படுவார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களது விருப்பத்துக்கேற்ப செலவு செய்ய நினைப்பதில் தவறில்லை. அதே சமயத்தில், அவர்களின் எதிர்காலத்தை எப்படி செக்யூர் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதும் மிக அவசியம்.

ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்தப் பணம் வந்ததும், முதலில் ஒருவரது மாதாந்தரச் செலவுக்கு எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு மாதம் சுமார் ரூ.10,000 தேவை என வைத்துக் கொள்வோம். அந்தத் தேவையை சமாளிக்க நீங்கள் சுமார் ரூ.16–20 லட்சத்தை நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு மேலுள்ள தொகையில் நீங்கள் சற்று ரிஸ்க் எடுத்து, பணவீக்கத்தைச் சமாளிக்கப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இதற்கான அஸெட் அலொகேஷனை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால், பணம் அதிகமுள்ளவர்கள் சார்ட்டில் போட்டுக் காட்டியுள்ளபடி அமைத்துக்கொள்ளலாம். நாம் ஏற்கெனவே கண்டதுபோல, நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீடுகளான ஆர்.பி.ஐ பாண்டுகள், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம், வங்கி டெபாசிட்டுகள், லிக்விட் ஃபண்டுகள் போன்றவற்றில் பெரும்பாலான முதலீட்டை (65%) வைத்துக்கொள்ளலாம்.

25%-ஐ பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (பேலன்ஸ்டு அட்வான்டேஜ், அக்ரெஸிவ் ஹைபிரிட் ஈக்விட்டி மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகள்) முதலீட்டைச் செய்து கொள்ளலாம்.

ஒரு சிறிய போர்ஷனை (10%) சாவரின் கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த வகை பாண்டுகள் ஆண்டுக்கு 2.50% வட்டியைத் தருவதுடன், மத்திய அரசாங்கத்தின் உத்தரவாதத்துடனும் வருகின்றன. மேலும் நீண்டகால முதலீட்டு ஆதாய வரியும் ஏதுமில்லை. ஓய்வுக்கால முதலீட்டில் ரிஸ்க் நிறைந்த முதலீடு எதுவும் வேண்டாம்.

Post Top Ad