ஊரடங்கு உத்தரவு: குழந்தைகளுக்கு வீட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 16, 2020

ஊரடங்கு உத்தரவு: குழந்தைகளுக்கு வீட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது எப்படி?





கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது பெரும் கஷ்டம். பெற்றோராக நீங்கள் உஷாராக இருந்தாலும்கூட வீட்டுச்சூழலில் எந்நேரமும் குழந்தையை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் "சைல்ட் ப்ரூஃபிங்" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தன்னிச்சையாக சுற்றுப்புறத்தை ஆய்ந்து விளையாட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் போன்றவை வளர்கின்றன. 




  பூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும். 

  மின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம். 

வாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்’ எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும். 



  மருந்து மற்றும் விஷப்பொருட்கள்:எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில்நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.

  ஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம். 


ஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும். 

  சமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும். 

மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.


Post Top Ad