வீட்டு வேலை செய்யும் பெண்களின் உழைப்பை முதலில் மதிப்போம்! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, April 23, 2020

வீட்டு வேலை செய்யும் பெண்களின் உழைப்பை முதலில் மதிப்போம்!

நம் சமூகத்தில், ஒரு கணிசமான சதவீதப் பெண்கள் 'சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்''என்று சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருக்கிறார்களா? என்றால், அதுதான் இல்லை.

இவர்கள் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் முன் விழித்தெழுந்து, எல்லோருக்கும் பின் உறங்கச் செல்கிறார்கள். இந்த விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட காலம் முழுவதும் இவர்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். ஓய்வெடுக்கும் நேரத்திலும்கூட இவர்களின் கைகள் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.


ஒரு குறிப்பிட்ட வேலை என்றில்லாமல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருப்பார்கள்.

அவளது வீட்டுப் பணிகளைத் துப்புரவுப் பணி, சமையல் பணி, சலவைப் பணி, குழந்தைகளையும் முதியவர்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் பராமரிக்கும் பணி என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவும் ஏராளமான சின்னஞ்சிறு பணிகளை உள்ளடக்கியவையாக இருக்கும்.

வீட்டுத் துப்புரவுப் பணிகள்: வாசல் பெருக்கி கோலம் போடுவது, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது, கழிவறையைச் சுத்தம் செய்வது, வளர்ப்புப் பிராணிகள் (ஆடு, மாடு, கோழி, நாய், பூனை) இருந்தால் அதன் வசிப்பிடத்தை சுத்தம் செய்வது.


சமையல் பணிகள்: மார்க்கெட் சென்று காய், கனிகளையும் மாமிசத்தையும் வாங்கி வருவது, மளிகைக் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்களை வாங்கி வருவது, ரேஷன் கடைக்குச் சென்று ரேஷன் பொருட்களையும் மண்ணெண்ணெயும் வாங்கி வருவது, மாவு மில்களுக்குச் சென்று மாவுகளை அரைத்து வருவது, தண்ணீர் பிடித்தல், பாத்திரங்களைக் கழுவுதல், தேநீர் போட்டுக் கொடுத்தல், மாவுகளைக் கொண்டு தோசையோ, இட்லியோ, சப்பாத்தியோ, பூரியோ செய்தல், அதற்கேற்ற சட்னி, சாம்பார், குருமா வகையறாக்களைச் செய்தல், அரிசியைக் கழுவி சோறு சமைத்தல், காய்களைத் துண்டுகளாக்கி சாம்பாரோ குழம்போ செய்தல், ரசம் வைத்தல், கூட்டுப் பொறியல்... பிறகு, சமைத்த உணவை குடும்பத்தினருக்குப் பரிமாறுதல், எல்லோரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுதல், பின்னர், எல்லோரும் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்தல். இந்த சமையல் வேலைகளை தினந்தோறும் மூன்று முறைகளோ அல்லது இரண்டு முறைகளோ குடும்பச் சூழலுக்கு ஏற்ப செய்தாகவேண்டும். அவ்வப்போது டீ, பழச்சாறு பானங்களும் தயாரிப்பது உண்டு.

துணிகள் சார்ந்த பணி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்த துணிகளை அப்படி அப்படியே அவிழ்த்துப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவற்றை மட்டுமல்லாமல், அழுக்குத் துணிகளையும் பாய், படுக்கை விரிப்பு, போர்வை போன்ற மற்ற துணிகளையும் துவைத்து, காயவைத்து, காய்ந்த பின் மடித்து அதற்குரிய இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். அயனிங் செய்வதும் உண்டு.

குழந்தைகளையும் முதியவர்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் பராமரித்தல்: வீட்டில் சிறு குழந்தைகளோ, வயது முதிர்வின் காரணமாக படுத்த படுக்கையாக பெரியவர்கள் இருந்தாலோ அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குழந்தைகளைக் குளிக்க வைத்து, உணவு ஊட்டி, சீருடை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வரவேண்டும். குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க நேர்ந்தால் இடையில் ஒரு முறை மதிய உணவளிக்க பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கும். வளர்ப்புப் பிராணிகளுக்கு நோய் வராமல் ஆரோக்கியப் பணிகள் செய்தல், குளிப்பாட்டுதல், நீரும் உணவும் வழங்குதல்...

இதரர் பணிகள்: இவை மட்டுமல்லாது, அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் குடும்பத்தினரின் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் அவர்களின் மனம் நோகாமல் பணிவிடை செய்யவேண்டும்.

இப்படியாக, ஒரு குடும்பப் பெண்ணின் தினசரிப் பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். மிக முக்கியமாக, இந்தப் பணிகளை எல்லாம் மாண்புடனும் ஈடுபாட்டுடனும் செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலடையவோ கோபப்படவோ கூடாது. 'சரியாக செய்யவில்லை'' என்று யாராவது தட்டை வீசி எறிந்தாலோ, கோபமாகத் திட்டினாலோ சகித்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் ஒரு குடும்பப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய குணநலன்கள்.


இத்தனைப் பணிகளையும் செய்யும் பெண்கள்தான் 'சும்மா வீட்டிலே இருக்கிறேன்'' என்று தாழ்வு மனப்பான்மையுடனும் தயக்கத்துடனும் சொல்கிறார்கள். காரணம், இவர்கள் செய்யும் எந்த ஒரு பணிக்கும் ஊதியம் கிடையாது. ஆகவே, இவர்கள் செய்யும் பணிகளை 'ஊதியம் இல்லாத கவனிப்பு பணிகள்'' (Umpaid care works) என்று உலக அளவிலான அமைப்புகள் வரையறுத்துள்ளன.

இவர்கள் செய்யும் பணிகளுக்கு ஊதியம் இல்லை என்பது மட்டுமல்ல, வீட்டில் மரியாதையும் கிடையாது. மாறாக, 'வருமானம் ஈட்ட வக்கற்று, வீட்டிலேயே வெட்டியாக பொழுதைக் கழித்துக்கொண்டு ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருப்பதாக' இந்த ஆணாதிக்க சமூகம், தங்களுக்குச் சாதகமாக இவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அதனால்தான், 'என் மனைவி வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்'' என்று எவ்வித மனஉறுத்தலும் இல்லாமல் கணவனும், அவரைப் பின்பற்றி குழந்தைகளும் 'அம்மா, சும்மாதான் வீட்டில் இருக்கிறார்'' என்றும் சொல்வதால், இவளும் 'சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்' என்று சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

உண்மையில், அத்தகைய பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பணமதிப்பு உண்டு. இதே வேலைகளை ஒரு பெண் தன்னுடைய வீட்டினில் செய்யாமல், மற்றவர் வீடுகளுக்குச் சென்று செய்வாரேயானால், அவருக்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான ஊதியம் கிடைக்கும்.

செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதியில் 'ஊதியம் இல்லாத கவனிப்பு பணியாளர்கள்''(Umpaid care workers) பலரை ஒருங்கிணைத்து, ஓர் ஆய்வை மேற்கொண்டோம். சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு, வெள்ளை... என வண்ணங்களைக் கொண்ட காகிதங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நிற காகிதத்திற்கும் ஒவ்வொரு வீட்டு வேலையின் பெயர்களை வைத்தோம். அதாவது, சிவப்பு நிறம் என்றால் சமையல் வேலை. ஒருவர் வேறொருவர் வீட்டுக்குச் சென்று சமையல் வேலை செய்வாரானால் அவருக்குக் கிடைக்கும் ஒரு மாத ஊதியத்தை அந்தக் காகிதத்தில் எழுதி உண்டியலில் போட வேண்டும். அதேபோல, வேறொரு நிற காகிதத்தில் துப்புரவுப் பணியையும் அதில் கிடைக்கும் ஊதியத்தையும் எழுதிப் போடவேண்டும்.

அதேபோல துணிகளைத் துவைக்கும் பணி, குழந்தை பராமரிப்புப் பணி, முதியோர் பராமரிப்புப் பணி ஆகியவற்றை உண்டியல்களில் எழுதி போட்டு, கடைசியில் அவர்கள் செய்யும் பணிகளின் பண மதிப்பைக் கூட்டினால், அந்த ஊதியமில்லா கவனிப்புப் பணியாளர்களின் ஊதியமானது அவர்களின் கணவர்கள் சம்பாதிக்கும் ஊதியத்தை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தோம்.


இந்த ஆய்வின் மூலமாக, பெண்கள் வீடுகளில் செய்யும் ஒவ்வொரு பணிக்கும் பண மதிப்பும் மாண்பும் மரியாதையும் உண்டு என்பதுடன் அது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமானது என்பதைப் பெண்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் உணரவைத்தோம்.
பொதுவாக, உணவு விடுதிகளில் ஓர் ஆண் - சமையல்காரராக, உணவு பரிமாறுபவராக, சாப்பிட்ட இலைகளை எடுப்பவராக, மேஜையைத் துடைப்பவராக, பாத்திரங்களைக் கழுவுபவராக பணியாற்றுகிறார்.

டீக்கடையில் டீ மாஸ்டராகவும் பஜ்ஜி போண்டா போடுபவராகவும், துணிக்கடைகளில் துணி விற்பனையாளராகவும், சலவைக்கடையில் துணிகளைத் துவைப்பவராகவும் அயனிங் செய்வராகவும் பணியாற்றும் இவர்கள், தங்கள் வீடுகளில் அதே வேலைகளைச் செய்வதில்லை. காரணம், நம் குடும்ப அமைப்பில் 'வீட்டு வேலைகளைப் பெண்கள்தான் செய்யவேண்டும்''என்றும், 'வீட்டு வேலைகளைச் செய்வது ஆண்மைக்கு அழகல்ல''என்றும் நம் ஜீன்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஆண்கள் வீட்டில் சமையல் செய்வதும், மனைவியின் துணிகளைத் துவைப்பவதும் திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமல்லாது, பொதுவெளியிலும் நகைச்சுவைக்குரிய விஷயங்களாக உள்ளன.

இக்கால 'கரோனா ஊரடங்கு' சூழலில், குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளியூர்களுக்குச் சென்று அங்கே தங்கியிருந்தவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பியிருப்பார்கள். இதனால் பெண்களின் வேலைப்பளு மேலும் அதிகரித்திருக்கும். இதனால் மனதளவிலான பிரச்சினைகளையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இந்நிலையை ஆண்கள் நேரில் கண்டறிந்திருக்கலாம். இதனை உணர்ந்து ஆண்களும் பெண்களின் ஊதியமில்லா கவனிப்புப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

ஒரு பெண்ணின் தினசரி குடும்ப வேலைகளை ஆண்களும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பெண் தனது மனித வளத்தினை மற்ற துறைகளிலும் பயன்படுத்துவதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். தனது தனித்திறமைகளையும் வெளிக்கொணர முடியும். அவளது தனிப்பட்ட குறிக்கோளை (லட்சியத்தை) அடையவும் முடியும்.

  லில்லி மார்கிரெட்
தனது தனித்திறமைகளையும் லட்சியங்களையும் தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொண்டு, தன்னுடைய மனித வளம் முழுவதையும் தன் குடும்பத்திற்காக 'ஊதியம் இல்லாத கவனிப்புப் மற்றும் பராமரிப்பு பணிகளை' (Umpaid care works) செய்து கொண்டிருக்கும் பெண்களின் வேலைகளை முதலில் மதிப்போம்; அவர்களின் மேன்மைகளைக் கொண்டாடுவோம். பிறகு அந்தப் பணிகளை எல்லோரும் பகிர்ந்துகொள்வோம். குடும்பம் மட்டுமல்லாது, சமூகம், அரசு யாவும் இவர்களின் மாண்புகளைப் போற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நம் தொடக்கக் கல்வி பாடப்புத்தகங்களில், 'அம்மா சமைத்து கொண்டிருக்கிறார்; அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்; அண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறார்; தங்கை பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்'' என்று படம் பார்த்து கதை சொல்வதற்கு மாற்றாக, குடும்பப் பொறுப்புகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதற்கேற்ற பாடத்திட்டத்தை உருவாக்கி சிறுவயதிலேயே சமத்துவ உணர்வு அவர்கள் மனதில் ஆழமாக பதியும்படியாக உருவாக்கவேண்டும்.

குடும்பங்களில், ஆண்களும் பெண்களும் குடும்பப் பணிகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையைக் கற்றுக்கொடுப்பதுடன், சமத்துவ விடியலுக்கான ஒரு குடும்பத்தை மற்றும் சமூகத்தை உருவாக்க முடியும். இன்றைய 'ஊரடங்கு' சூழலில் அப்பணியை இன்றே தொடங்குவோம்.

லில்லி மார்கிரெட்,
வளரிளம் பருவ ஆலோசகர், சமூகச் செயற்பாட்டாளர்.

Recommend For You

Post Top Ad