தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: 19 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 10, 2020

தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: 19 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை







தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.

கரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இது தவிர நச்சுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசுத்துறை சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

19 பேர் கொண்ட இந்த நிபுணர் குழு இன்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிபுணர் குழு சில பரிந்துரைகளை அளித்தது. அந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரை குறித்து நிபுணர் குழுவின் உறுப்பினர் பிரதிபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

'கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் முயற்சிகள் நன்றாக உள்ளன. பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை நன்றாக உள்ளது.

மருத்துவமனை சிகிச்சை ஏற்பாடுகள், சிகிச்சைக்கான படுக்கை உள்ளிட்ட வசதிகள் நன்றாக உள்ளன. நோயாளிகள், அவர்களது குடும்பத்தாருக்கு உதவ தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் சிறப்பானவை. மருத்துவர்கள், செவிலியர்கள் நலனுக்காக அரசு நல்ல நிலை எடுத்துள்ளது.

என்ன முடிவு எடுத்தாலும், முயற்சி எடுத்தாலும் தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்பதை எங்கள் பரிந்துரையாக தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம்.

நாங்கள் என்ன பரிந்துரைக்கிறோம் என்றால் அந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மேலும் அதிக பரிசோதனை , தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை ஆய்வு செய்து முழுமையாக சோதனை நடத்தப்பட வேண்டும்'.


இவ்வாறு பிரதிபா தெரிவித்துள்ளார்.

Post Top Ad