'நினைத்ததை விட ஆபத்து அதிகம்' - கரோனா குறித்து ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்! - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, March 11, 2020

'நினைத்ததை விட ஆபத்து அதிகம்' - கரோனா குறித்து ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!

கரோனா வைரஸ் நாம் நினைத்ததைவிட நீண்ட தூரத்திற்கு பரவும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், கரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவும் தூரம் கொண்டது என்பது குறித்து சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கரோனா வைரஸ் 30 நிமிடங்கள் காற்றில் பரவி இருக்கும்.

பல்வேறு வகையான மேற்பரப்புகளில் பல நாட்கள் உயிர்வாழ முடியும். கரோனா வைரஸ் அதிகபட்சம் 15 அடி தூரம் வரை பயணம் செய்ய முடியும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசின் தொற்றுநோயியல் வல்லுநர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில், கண்ணாடி, உலோகம், துணி, பிளாஸ்டிக் மற்றும் காகிதம் போன்ற மேற்பரப்புகளில் கரோனா வைரஸ் தொற்று இரண்டு முதல் மூன்று நாட்கள் உயிருடன் இருக்க முடியும் என்றும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

சீனாவில் வைரஸ் பாதித்த ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு சென்ற பின்னர் 30 நிமிடங்களுக்கு பின்னர் மற்றொருவர் அதே இடத்திற்குச் செல்லும்போது இரண்டாமவர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்.

அதேபோன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 15 அடி தூரத்தில் இருந்த மற்றொரு நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கொடிய நோயின் பெருக்கத்தைத் தடுப்பதற்காக இன்னும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

பொது இடங்களில் மற்றவர்களிடம் இருந்து குறைந்தது 3 முதல் 6 அடி தூரம் வரை தள்ளி இருக்க வேண்டும். குறிப்பாக, ஏ.சியில் மூடப்பட்ட அறையில் இது பரவும் தூரம் அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தை கையாள வேண்டும். வெளியில் சென்று வந்த பின்னர் உடலை சுத்தம் செய்வது, கை, கால்களை அடிக்கடி கழுவுவது, பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது, இது திரவம் வழியாக அதிகம் பரவுவதால் இருமல், தும்மலால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது என தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.


அரசும், பொதுப் போக்குவரத்தை முடிந்தவரை சுத்தமாகவும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.Recommend For You

Post Top Ad