'மன அழுத்தம் நல்லது' என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? - Asiriyar.Net

Post Top Ad


Monday, April 13, 2020

'மன அழுத்தம் நல்லது' என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


அதிக மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று கூறப்படும் வேளையில், அதற்கு எதிர்மறையாக அதிக மன அழுத்தத்தினால் பல்வேறு நன்மைகளும் ஏற்படும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு.

அமெரிக்காவின் பென் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, ஸ்ட்ரெஸ் & ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பது குறிப்பிட்ட நபரிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைப் பெற வாய்ப்பளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது உண்மைதான்.

ஆனால், இதில் நேர்மறையாகவும் பல உண்மைகள் பொதிந்துள்ளன என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் டேவிட் அல்மேடா.

'மன அழுத்தம், மற்றவர்களுடன் நம்மை இணைக்கப் பயன்படுகிறது. இது மனித அனுபவத்திற்கு முற்றிலும் இன்றியமையாதது என்று நான் கருதுகிறேன். எந்த ஒரு உணர்ச்சிகளின் மூலமாகவும் ஏதோ ஒன்றை நாம் பெறுகிறோம். அந்த வகையில், அதிக மன அழுத்தமும் நல்லதுதான். சமூகத்தில் மற்றவர்களிடையே எதிர்மறையான சூழ்நிலைகளை, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்' என்று அல்மேடா கூறுகிறார்.

ஆய்வில் பங்கேற்ற 1,622 பேரும் ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் ஒருமுறை உளவியல் ரீதியாக பரிசோதிக்கப்பட்டனர். பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள், நடந்துகொண்ட விதத்தினை வைத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிறருடன் வாதத்தில் ஈடுபடும்போது, பணியாளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில், இளம் தலைமுறையினருக்கு பள்ளி/கல்லூரிகளில், பெண்களுக்கு வீட்டில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் அந்த சமயத்தில் அதிகம் எதிர்பார்ப்பது மற்றவரின் ஆதரவைத்தான். அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இரு மடங்கு ஆதரவைப் பெற விழைகின்றனர். அதே நேரத்தில் மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவு, எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்களை விட பெண்களே அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்; அதிக ஆதரவைப் பெறவும் விரும்புகின்றனர். அதேபோன்று மன அழுத்தத்தை வெளிப்படுத்துதில் ஆண்கள் குறைவாகவே இருக்கின்றனர் என்றும் அவர்கள் மன அழுத்தத்தை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவதாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

இறுதியாக, மன அழுத்ததை எதிர்கொள்பவர்கள் சமூகத்தில் பல பிரச்னைகளை திறமையுடன் எதிர்கொள்ளவும், தங்களது பிரச்னைகளை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad