பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் .!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 29, 2020

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் .!!





கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிவது இல்லை எனவும், வருகை புரிந்தாலும் சில ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவந்தது. இதனையடுத்துஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த முறையினால் பள்ளியில் உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு இயந்திரத்தில் ஆசிரியர் எந்த நேரத்தில் தனது விரல் ரேகையை பதிவு செய்கிறாரோ அந்த நேரமே வருகை நேரமாக கருதப்படுகிறது.

இதனால் ஆசிரியர்கள் இறைவணக்க கூட்டத்திற்கு முன்னர் வரத்தொடங்கினர்.

ஆனாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர்ந்து தாமதமாக வருகை புரிந்தது கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் தாமதமாக வருகை புரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.





மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட வருகைப்பதிவு அறிக்கையில் பெரும்பாலான பள்ளிகளில் விடுப்பு மாற்றுப்பணி விவரங்கள் பதிவு செய்யாமல் இருந்துள்ளது. மேலும் தாமதமாக வருகை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர் பட்டியல் பள்ளி வாரியாக பெறப்பட்டுள்ளது.

தாமத வருகை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாமதமாக வருகை புரிந்த ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாதென உரிய விளக்கத்தினை பெற்று தலைமை ஆசிரியர் 28ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் 100% வருகை பதிவினை மேற்கொள்ளும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியரையே சாரும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad