என் ஏழு மகள்களும் படிக்க வேண்டும்!" - ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தையின் ஆசை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 7, 2019

என் ஏழு மகள்களும் படிக்க வேண்டும்!" - ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தையின் ஆசை




மகள்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்கள் தங்கள் தந்தைகளுக்குச் சிறுமிகள்தான்'. அப்பா-மகள் பாசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்பாக்கள் எப்போதும் தங்கள் மகள்களுக்கு ஹீரோதான். இப்படிதான் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மியா கான் என்பவர் தன் ஏழு மகள்களுக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கிறார்.

 


தன் குழந்தைகளுக்கு மட்டுமன்றி தற்போது இணையத்திலும் சூப்பர் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

யார் இந்த மியா கான்? சமீபத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஸ்வீடிஷ் கமிட்டி என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் (NGO) ஒன்று தனது முகநூல் பக்கத்தில் மியா கானைப் பற்றிப் பதிவிட்டிருந்தது. அந்தப் பதிவின் மூலம் மியா நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில் தன் மகளின் படிப்பை கவனத்தில் கொண்ட மியா கான், ஸ்வீடிஷ் கமிட்டி தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நூரானியா பள்ளிக்கு தினமும் தன் மகளை 12 கிலோ மீட்டர் சைக்கிளில் அழைத்து வந்து, தினமும் நான்கு மணி நேரம் காத்திருந்து மீண்டும் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

ஐம்பது வயதாகும் மியா கான், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏழு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள். இதய பலவீனம் காரணமாக, கான் இப்போது வேலைக்குச் செல்வதில்லை. அவரின் இரண்டு மகன்களும் வேலைக்குச் செல்கின்றனர்.

பள்ளி சென்று படிக்காத மியா கானுக்கு ஒரே ஆசைதான். தன் பெண்கள் படிக்க வேண்டும். அவர்கள் ஆண்களைப்போல் தைரியமாக இருக்க வேண்டும் என்பதே. தன் ஒரு மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற காரணத்தால் உடல் நிலை சரி இல்லாத போதும் தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவள் வகுப்பு முடியும் வரை காத்திருந்து மீண்டும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறார். மேலும், இவரின் நான்கு மகள்கள் கிராமத்தில் உள்ள ஓர் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று படித்து வருகின்றனர்.

மியா கான்
கானின் இந்தச் செயலைத்தான் அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பல கஷ்டங்களைத் தாண்டி தன் மகள்களைப் படிக்க வைக்கப் போராடும் இவர் உண்மையில் ஒரு சூப்பர் ஹீரோ தான்!

Post Top Ad