இலவசமா இருந்தாலும்... கொடுக்கிறதுக்கு மனசு வேணும் சார்' - சிறுவனை நெகிழ வைத்த மாணவன்! - Asiriyar.Net

Post Top Ad


Monday, December 23, 2019

இலவசமா இருந்தாலும்... கொடுக்கிறதுக்கு மனசு வேணும் சார்' - சிறுவனை நெகிழ வைத்த மாணவன்!

புதுக்கோட்டை அருகே தொழுவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷி பிரசாத், சிலட்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து தனியார் ஐ.டி.ஐ ஒன்றில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலட்டூர் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில், ரிஷி பிரசாத் உள்ளிட்ட சில மாணவர்கள் தவறவிட, தவறவிட்ட மாணவர்களை அழைத்து சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியர்கள், மிதிவண்டிகளைக் கொடுத்தனர். அப்போது, மிதிவண்டியைப் பெற்றுக்கொண்ட ரிஷி பிரசாந்த், வாங்கிய கையோடு அந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷை வரவழைத்து அவரின் கையில் சாவியைக் கொடுத்தார்.இனி நீ இந்தச் சைக்கிளில்தான் பள்ளிக்கு வர வேண்டும் என்று அன்புக்கட்டளை விதித்து, மாணவன் சந்தோஷை நெகிழ வைத்துள்ளார். சைக்கிள் கிடைத்ததிலிருந்து சந்தோஷ்க்கு ரொம்பவே மகிழ்ச்சி. தினமும் ஜாலி ரெய்டு சென்று வருகிறார். இதுபற்றி, ரிஷி பிரசாத்திடம் கேட்டபோது, "சந்தோஷ் தம்பி எங்க ஊருதான். அவனுக்கு அப்பா இல்லை, அம்மா உடம்பு முடியாதவங்க. உடம்பு முடியாததோட கூலி வேலை செய்துதான், குடும்பத்தைக் காப்பாத்துறாங்க. ஊர்ல இருந்து பள்ளிக்கு தினமும் 3 கி.மீ நடந்துதான் போவான். நல்லா படிக்கிற பையன். பாக்குறதுக்கே ரொம்ப கஷ்டமாக இருக்கும். நாங்களும் கஷ்டப்படுகிற குடும்பம்தான்.

ஆனாலும், எனக்கு இப்போதைக்கு சைக்கிள் தேவை இல்லை. ஐ.டி.ஐ-க்கு பஸ்ல போயிட்டு வந்திடுவேன். எனக்குக் கிடைக்கிற மிதிவண்டியை சந்தோஷ்க்கு கொடுக்கலாமான்னு அம்மா, அப்பாகிட்ட கேட்டேன். அவங்க ரொம்பவே சந்தோஷப்பட்டு, கண்டிப்பாகக் கொடுக்கணும் ரிஷின்னு சொன்னாங்க. உடனே, எங்க பள்ளி வாத்தியார்கிட்ட போய் என்னோட சைக்கிளை சந்தோஷ்க்கு கொடுத்திடுங்க சார்ன்னு சொன்னேன். அவங்களும் சந்தோஷப்பட்டு, உன் கையால கொடுத்திடு ரிஷின்னு சொன்னாங்க. ரொம்பவே மனசுக்கு சந்தோஷம்" என்றார்.

அன்பளிப்பு கொடுத்த மாணவன்
சந்தோஷின் அம்மா கோகிலா, "தொழுவங்காடு பள்ளியிலதான் 8-ம் வகுப்பு வரைக்கும் படிச்சான். 9-ம் வகுப்பு சிலட்டூருக்குப் போறான். ரொம்ப நாளா நடந்து போகக் கஷ்டமாக இருக்கு, சைக்கிள் வாங்கித்தாங்க அம்மான்னு கேட்டுக்கிட்டே இருந்தான். குடும்ப கஷ்டம் என்னால அவனுக்கு வாங்கிக் கொடுக்க முடியலை. இலவச சைக்கிளாக இருந்தாலும், கொடுக்கிறதுக்கு மனசு வேணும். ரிஷி தம்பியை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.Recommend For You

Post Top Ad