குழந்தைகளுடன் உரையாடுவோம்!! வகுப்பறை என்னும் திறன் அறியும் களம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 28, 2019

குழந்தைகளுடன் உரையாடுவோம்!! வகுப்பறை என்னும் திறன் அறியும் களம்!





நமது கல்வி முறையின் பெரும்பகுதி தேர்வை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அதன் நீட்சியாக பாட நூலின் மொத்த ஆக்கிரமிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு முழுமையான வகுப்பறை அனுபவங்களாக மாறி விடுகின்றன. வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் சுதந்திரமான ஒன்றாக இருக்க வேண்டும் . அப்போதுதான் மகிழ்ச்சியான கற்றல் - கற்பித்தல் நடைபெறும் என்பதோடு மாணவரின் திறன்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை அறிதலும், அதைக் குறிப்பிட்டு பலர் முன்னிலையில் பாராட்டுவதும், சிறு பரிசுகள் வழங்குதலும் நடைபெற வேண்டும். அப்படியான வகுப்பறையில் மாணவர்கள் எப்போதும் உற்சாகத்துடனேயே காணப்படுகிறார்கள். அங்கு கடினமான பாடங்களும் குழந்தைகளுக்கு விருப்பமாகி விடுகின்றன. ஆரம்ப காலங்களில் மாணவரது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பாராட்டு அடிப்படையாக அமைகிறது.

எப்போதுமே வகுப்பறையில் குறும்புக்கார குழந்தையாக அனைத்து ஆசிரியர்களையும் வருத்தப்பட வைக்கும் 7-ம் வகுப்பு மாணவி நந்தினி. ஆனால் நந்தினியிடம் அற்புதமாக வரையும் கலை இருப்பதையும் கைவினைப் பொருட்கள் செய்யும் திறன் இருப்பதையும் ஆசிரியர் ஒருவர் கண்டறிகிறார். அதற்காக சிறு சிறு பாராட்டு வார்த்தைகளை வகுப்பறையில் கூறுகிறார்.

நந்தினி உற்சாகமாகி விடுவதுடன் தனது குறும்புகளை திறன்களாக வெளிப்படுத்துகிறார். ஓவியங்கள் வரைதல், கதைகள் எழுதுவது, எழுதிய கதைகளுக்கு தானே ஓவியங்கள் வரைவது என அந்த மாணவி தன்னை வளர்த்துக் கொள்கிறார். தற்போது தேர்வில் 70% மதிப்பெண்கள் வாங்குமளவிற்குத் தயாராகி விட்டார். இது அவரைப் பொறுத்தவரை மிகப்பெரிய நடத்தை மாற்றம். சரியான திறன்களை அடையாளம் கண்டு அதற்கான வாய்ப்பையும் சுதந்திரத்தையும் வகுப்பறையில் தந்ததால் தான் இது சாத்தியமாயிற்று.

அதே வகுப்பறையில் மோனிஷா தனது புத்தக வாசிப்பு அனுபவத்தை எழுதத் தொடங்கியவர். அவரது ஆர்வத்தைக் கண்டு, ஒரு சிறுவர் புத்தகத்திற்கு அவர் எழுதிய பின்னூட்டத்தை புத்தகத்தின் பின் அட்டையில் இடம் பெறச் செய்கிறார் ஆசிரியர். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய பாராட்டு. தனது பெயருடன் தான் எழுதிய கருத்தை அனைவரும் வாசிக்கும் ஒரு புத்தகத்தில் காண்கையில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் மோனிஷா. நான் எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளராக வருவேன் என்றும் சொல்கிறார்.



படிப்பு- கசப்பு

அனுப்ரியாவுக்கு படிப்பது என்றால் எட்டிக் கசப்பு. ஆனால் வகுப்பறையில் ஒரு நாள் செயல்பாடாக ஆசிரியர் தந்த ’காற்று’ தலைப்பிலான பாடப்பகுதியை ஆசிரியரை விட அற்புதமாக நடத்திக் காட்டுகிறார். உரையாடல் வழியாக ஒரு கருத்தை மற்றவரிடம் பதிய வைக்கும் திறன் ஏழாம் வகுப்பு மாணவி அனுவிடம் இருப்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர். அவரது கவனம் கூடுதலாகி, படிப்பிலும் சற்றே மாற்றம் உருவாகிறது.

முதல் மதிப்பெண் வாங்கும் மகேஸ்வரிக்கு வகுப்பைக் கவனித்துக் கொள்ளும் தலைமைப் பண்பில் சந்றே திறன் குறைவு . ஆனால் மெதுவாகக் கற்கும் மாணவரை அருகில் அமர வைத்து அவர்களுக்குப் புரியும்படியாக கணக்கைக் கற்றுக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டுவதில் திறமையுடையவர். ஆயிஷா சித்திகா எப்போதும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவராக இருக்க ஒரு நாள் பேச்சுப் போட்டியில் பேச அழைக்கப்படுகிறார். கல்வி குறித்து அவரது பார்வையும் எப்படி மாற்றம் பெற வேண்டும் என்றும் யதார்த்தமாகப் பேசுகிறார் . மாணவிகளின் கைத்தட்டல் வகுப்பை கலகலப்பாக்குகிறது. அந்த உற்சாகமும் பாராட்டும் அடுத்த தேர்வில் அவரை நல்ல மதிப்பெண் பெற வைக்கிறது.



ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர் சாருலதா. அவரை சாருவின் பெற்றோர் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டனர். ஆங்கில வழியில் அனைத்துப் பாடங்களும் சாருலதாவை மிரட்டுகின்றன, பயப்படுகிறார். ஆனால் அவளிடம் விடாமுயற்சி அதிகமாக இருப்பதைக் கண்டறிகிறார் ஆசிரியர். விளைவு ஆங்கிலத்தில் 95 சதவிகித மதிப்பெண் பெறும் திறன் பெறுகிறார். அது மட்டுமல்ல , ஆங்கிலப் புத்தகத்தின் பாடப்பகுதியை வீட்டில் படித்து குறிப்பெடுத்து அகராதியைப் பயன்படுத்தி வகுப்பறையில் மற்ற அனைவருக்கும் பாடமே நடத்துகிறார்.



தேர்வுக்கு தயார் செய்யும் கூடங்கள்

இவ்வாறு நம்மிடம் வகுப்பறையில் உறவாடும் ஒவ்வொரு குழந்தையும் அவர்களிடம் ஏதோ ஒரு திறனுடன்தான் வருகின்றனர். மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் கொண்டு நாம் அவர்களை அணுகும்போது, அவர்களது திறன்கள் அறியப்படாமலேயே மருகி விடுகிறது. அதோடு அவர்களது மனம் சோர்வுக்கு ஆளாகி விடுகிறது. தங்களுக்குப் பிடித்தமான ஒரு கலையை அல்லது பணியை அவர்கள் செய்யாமல் விடுவது எண்ணி மனதிற்குள்ளேயே உழல்கின்றனர். அதைப் பகிர்ந்து கொள்ள ஒரு இடமின்றி மனவியல் சிக்கலுக்குக் கூட ஆளாகிவிடுகின்றனர். ஏனெனில் வீடுகள் பெரும்பாலும் தேர்வுக்கு அவர்களைத் தயாரிக்கும் கூடங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த திறன் அடிப்படையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். எத்தனையோ குழந்தைகள் பெற்றோருக்காக பாட்டு க்ளாஸ் , டான்ஸ் கிளாஸ், இந்தி க்ளாஸ் போனோம் எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் குழந்தைகள் அவர்களுக்கான விருப்பமான திறனில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான களம் வகுப்பறைதான். ஆசிரியர்கள்தான் அதற்கு வித்திட வேண்டும். அதற்காக நாம் பாடநூல் , பாடத்திட்டத்தை விட்டு விட வேண்டும் என்று அர்த்தமல்ல.

மேற்சொன்ன அனைவரது திறன் சார்ந்த செயல்பாடுகளும் பாடப் புத்தக இணைச் செயல்பாடுகளுடன் இணைத்து விடும் திட்டமிடல் இந்த வகுப்பறையில் நிகழ்ந்தது. தலைமைப் பண்புகள், பேச்சாற்றல், எழுத்தாற்றல், வரைதல் இப்படியான எல்லாப் பண்புகளும் வகுப்பறையில்தான் ஆரம்பமாகின்றன.



அவற்றை பாடப் புத்தகச் செயல்பாட்டில் இணைத்து வெளிப்படுத்த வழி காட்ட வேண்டும். இதுவே நமது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ( CCE - Continuous Comprehensive Evaluation) முறை. இந்தப் புரிதலை ஆசிரியர்கள் நமக்குள் விரிவாக்கம் செய்து கொண்டால் கல்வியின் மதிப்பீட்டு முறைக்கும் பொருள் உருவாகும் .

திறன் கண்டறிவது எப்படி?
ஆரம்ப காலங்களில் மாணவர்களின் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிற்கும் பாராட்ட வேண்டும் . பாராட்டுகள் நிச்சயமாக அவர்களை அடுத்தடுத்த படிநிலைகளுக்குப் பயணப்பட வைக்கும். பாராட்டுகள் உற்சாகமான வார்த்தைகளாகவோ சிறு பரிசுப் பொருட்களாகவோ புத்தகம், பேனா, ரப்பர், பென்சில் இப்படியான பரிசுகளாகவோ இருக்கலாம்.

தனது வாழ்நாளில் ஏறக்குறைய 15 வருடங்கள் பள்ளிகளில் கழிக்கும் குழந்தைகளின் விருப்பு, வெறுப்பு, அன்பு, கோபம், நடத்தை மாற்றங்கள் என அனைத்தும் வகுப்பறைக்குள்தான் உருவாகின்றன. இயன்றளவு அவர்களது திறனறிந்து விட்டால் அவர்கள் சிறந்த மனிதர்களாக உருவாக ஆசிரியர்கள் உதவிட முடியும். பல்வேறு குடும்ப சூழ்நிலைகளின் வெக்கையிலிருந்து நிழல் தேடி வரும் அவர்களுக்கான இடம் பள்ளியின் வகுப்பறைகளே. ஆகவே திறன் அறியும் களங்கள் வகுப்பறைகள்தான், தூண்டுகோல் பாராட்டுகள்தான்.

தொடர்ந்து உரையாடுவோம்.

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com



Post Top Ad