FLASH NEWS :- 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 6, 2019

FLASH NEWS :- 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து






ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு முப்பருவ பாடம் மற்றும் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இந்த சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். பல மாநிலங்களில் தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர்; பாடங்களும் நடத்தப்படவில்லை. அதனால் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு வரும் போது தங்கள் தாய்மொழியில் கூட எழுத படிக்கத் தெரியாமல் இருந்தனர்.


இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் தேர்வு நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்யவும் சலுகை வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தேர்வு குறித்து உரிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துவங்கியுள்ளன. இதையடுத்து எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ள முப்பருவ பாட முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே அந்த வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

இந்த பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும். எனவே மூன்று பருவ பாடங்களுக்கும் ஆண்டின் இறுதி வரை ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுமை அதிகரிப்பு!

தமிழக பள்ளி கல்வி சார்பில் 2011ல் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ பாட முறை அமலானது. முதல் பருவத்தில் செப்டம்பர் வரை நடத்தப்படும் பாடத்தில் இருந்து காலாண்டு தேர்வுக்கான கேள்விகள் இடம் பெறும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் இரண்டாம் பருவமான அரையாண்டு தேர்வில் கேள்விகள் இடம்பெறும். அதன்பின் இரண்டு பருவ பாடங்களும் நடத்தப்படாது. ஜனவரி முதல் நடத்தப்படும் மூன்றாம் பருவ பாடங்களில் இருந்து மட்டும் ஆண்டு இறுதி தேர்வில் கேள்விகள் இடம்பெறும்.




அதனால் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு சுமையில்லாத கல்வி வழங்கப்பட்டது. தற்போது பழைய முறைப்படி மாணவர்கள் ஆண்டு முழுவதும் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுடன் கல்வி மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Post Top Ad