'ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 16, 2019

'ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்




ஆசிரியர்களின் கனவுகள் நிறைவேறும் காலம் மிக விரைவில் வரவிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மேலும், மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, தனியார் பள்ளியின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்திய அளவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்தான் படிப்பறிவு மிக்கவர்களாக உள்ளனர். மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குதான் திறமையும் ஆற்றலும் அதிகளவு உள்ளன. இத்தகைய திறமையையும் ஆற்றலையும் உருவாக்குபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆகவே தற்போது உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டில் மடிக்கணிணி வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மாணவர்களின் மடியில் கணினிகள் தவழும்போது, அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் மடியிலும் தவழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.


மேலும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசிடம் திட்டம் உள்ளது. எனவே ஆசியர்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று இந்த அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

ஆசிரியர்களின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளதால், அந்தக் கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் வரவிருக்கிறது. ஆசிரியர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதை அரசால் யூகிக்க முடிகிறது. அதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு சலுகைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

Post Top Ad