அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை - தலைமை ஆசிரியை கைது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 24, 2019

அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை - தலைமை ஆசிரியை கைது




தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 150 தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியரின் கொடுமை தாங்காமல் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மரிய ஐஸ்வர்யா, இவர் இரு தினங்களுக்கு முன்பு உறவினர் இறந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாகவே வகுப்பு ஆசிரியர் ஞானபிரகாசம் என்பவர் மாணவி ஐஸ்வர்யாவை குறிவைத்து கடுமையாக கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சனிக்கிழமை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்ற நிலையில், மாணவி ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியர் ஞானபிரகாசத்தின் டார்ச்சரால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் அளித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
மாணவியின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், முன்கூட்டியே சொல்லாமல் ஐஸ்வர்யா விடுப்பு எடுத்ததற்கு தண்டனையாக 150 தோப்புக் கரணம் போட வேண்டும் என்று ஐஸ்வர்யாவை நிர்பந்தித்துள்ளார் ஆசிரியர் ஞானபிரகாசம். அன்று அவரது வகுப்பு நேரம் முடியும் வரை தோப்பு கரணம் போட்ட ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை கூட ஆசிரியர் கண்டுகொள்ளாமல் எழுந்து சென்ற நிலையில், உடன் படிக்கின்ற மாணவிகள்தான் ஐஸ்வர்யாவின் மயக்கத்தை தெளியவைத்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பருவத்தேர்வில் வகுப்பில் 2-வது மாணவியாக மதிப்பெண் பெற்ற ஐஸ்வர்யாவை தேர்வில் காப்பி அடித்ததாக குற்றஞ்சாட்டி வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கி உள்ளார்.

அத்தோடு இல்லாமல் ஐஸ்வர்யாவை பார்த்தாலே அடாவடி சைக்கோ போல ஆசிரியர் ஞானபிரகாசம் நடந்து கொண்டுள்ளார். இதனால் சனிக்கிழமை அவர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் தனக்கு நேர்ந்த கொடுமைகளால் மனம் உடைந்து மாணவி ஐஸ்வர்யா உயிரை மாய்த்துக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் ஞானபிரகாசத்தை காப்பாற்றுவதற்காக, அவரை பள்ளியில் இருந்து தப்பிக்க வைத்த தலைமை ஆசிரியை கனகரத்தினமணி, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்று போலீசாரிடம் நாடகமாடினார்.

மாணவிகள், ஆசிரியர் ஞான பிரகாசத்தை பார்த்ததாக சொல்ல, வருகை பதிவேட்டிலும் ஆசிரியரின் கையெழுத்து இருந்ததால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து ஆசிரியரை ஒப்படைக்காமல் தலைமை ஆசிரியை மறைக்க முயற்சிப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த ஆசிரியர் ஞானபிரகாசத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை ஆசிரியை கனகரத்தினமணியை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியர் ஞானபிரகாசத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

அத்தோடில்லாமல் ஆசிரியர் ஞானபிரகாசத்தின் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Post Top Ad