தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் - Asiriyar.Net

Post Top Ad

Saturday, October 19, 2019

தலையில் அட்டைப்பெட்டி அணிந்து கொண்டு தேர்வு எழுத நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள்
கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, அவர்களது தலையில் அட்டைப் பெட்டிகளை போட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இது எதற்கு தெரியுமா? ஒரு மாணவர், மற்றவரை பார்த்து எழுதக்கூடாது என்பதற்காக.

இந்த செயலுக்காக அந்த மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மாவட்ட உயர் அதிகாரியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.

கர்நாடகாவின் ஹவேரி நகரத்தில் உள்ள பகத் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வுத்தாளை பார்த்து மட்டுமே எழுத முடியும் என்கிற மாதிரி அந்த அட்டைப்பெட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்தப் பள்ளியின் நிர்வாகி சதீஷ் மீது, மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தனர்.நான் மாவட்ட துணை ஆணையரிடம் இந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியும், இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளேன்" என்று பிபிசியிடம் சதீஷ் தெரிவித்தார்.

ஆனால், தான் மாணவர்களின் ஒப்புதலோடுதான் இதனை செய்ததாகவும், மாணவர்கள்தான் அட்டைப்பெட்டியை கொண்டு வந்தார்கள் என்றும் சதீஷ் கூறினார்.

"யாரையும் நான் நிர்பந்திக்கவில்லை. புகைப்படங்களில் பார்த்தால் தெரியும், சில மாணவர்கள் அட்டைப்பெட்டிகளை போட்டிருக்க மாட்டார்கள். சிலர் அதனை போட்டுக் கொண்ட 15 - 20 நிமிடங்களில் கழட்டிவிட்டனர். ஒரு மணி நேரம் கழித்து நாங்களே அவற்றை எடுக்கும்படி கூறிவிட்டோம். ஆனால், சமூக ஊடகங்களில் இது வேகமாக பரவிவிட்டது" என்றார் அவர்.

இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு மற்றவர்களை பார்த்து எழுதும் பழக்கம் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த சதீஷ், "அவ்வளவாக இல்லை. மாணவர்களிடம் கேட்டுதான் இந்த முடிவை எடுத்தோம். சோதனை முறையில்தான் இதனை செய்தோம். சமீபத்தில் மும்பையில் இதுபோன்று நடந்ததாக ஏதோ ஒரு செய்தித்தாளில் பார்த்ததாக எனக்கு சொல்லப்பட்டது. மேலும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது பொதுவான பழக்கம்தான்" என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் புகைப்படம் வைரலானதை அடுத்து, சதீஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் துணை ஆணையர் முன்பு ஆஜரானார்.

"நான் அந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பார்த்தவுடன் பள்ளிக்கு விரைந்தேன். நான் அங்கு சென்றபோது, இன்னும் சில மாணவர்கள் அட்டைப்பெட்டிகளை தலையில் அணிந்தவாறு தேர்வு எழுதியதை பார்த்தேன். அவர்கள் வேதியியல் மற்றும் வணிகவியல் பாடத் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார்கள்" என்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ்.சி. பீர்சடே தெரிவித்தார்.

மாணவர்கள் மீது இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

"அது மாணவர்களிடம் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், இது கேலிக்காக செய்ததாக சொல்லப்பட்டதா, அல்லது மற்றவர்களை பார்த்து எழுதக் கூடாது என்பதற்காக செய்யப்பட்டதா என்பதை பொறுத்து இதன் விளைவுகள் மாறும். மற்றவர்களை பார்த்து எழுதுவார்கள் என்பதற்காக இது செய்யப்பட்டது என்று தெரிந்தால், இந்த உலகம் தங்களை நம்பவில்லை என்று குழந்தைகள் நினைக்க தொடங்கலாம்" என்கிறார் மனநல நிபுணர் அசிரா சாட்டர்ஜி.

"மற்றவர்களை பார்த்து மாணவர்கள் எழுதாமல் பார்த்துக் கொள்வது ஆசிரியர்களின் வேலை. அதைவிட்டுவிட்டு இதுபோன்று செய்வது தவறான விஷயம். அப்படியே மாணவர்கள் மற்றவர்களை பார்த்து எழுதினாலும், அதை கையாள வேறு வழிகள் உள்ளன" என்று அவர் கூறினார்.


Recommend For You

Post Top Ad