கெடுபிடிகள் இடையே போட்டித் தேர்வு : பட்டதாரிகள் அதிர்ச்சி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 28, 2019

கெடுபிடிகள் இடையே போட்டித் தேர்வு : பட்டதாரிகள் அதிர்ச்சி




முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வுக்கு வந்த பட்டதாரிகள் அணிந்து வந்த நகைகளையும் கழற்ற வேண்டும் என்று தேர்வு அதிகாரிகள் கெடுபிடி காட்டியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களில் புதிய ந பர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு நேற்று தொடங்கியது. நாள் ஒன்றுக்கு இரண்டுகட்டமாக நடத்தப்படும் இந்த கணினி வழித் தேர்வு நாளையுடன் முடியும். இதில் 17 பாடத் தலைப்புகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், 297 பேரின் விண்ணப்பங்கள் சரியான விவரங்கள் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வு முழுக்க முழுக்க கணினி வழியில் நடத்தப்படும் என்பதால் தேர்வை நடத்திக் கொடுக்கும் பொறுப்பு தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் 154 தனியார் கணினி மையங்கள், பயிற்சி மையங்கள், தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள் இந்த தேர்வில் நடக்காமல் இருக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால், நேற்று காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், வேலூர், சேலம் மாவட்டங்களில் இரண்டு தேர்வு மையங்களில் கணினி சரியாக வேலை செய்யவில்லை. சர்வர் கோளாறு காரணமாக அந்த மாவட்டங்களில் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டது. அதனால் காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிந்தது. இதனால் அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில், தேர்வு எழுத வருவோர் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது, பெல்ட், ஷூ அணிந்து வரக்கூடாது, பெண்கள் நகைகள் அணிந்து வரக்கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. இதனால் அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று காலை 8 மணிக்கே அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுத வந்தவர்களை ஆய்வு செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. செல்போன்கள், கடிகாரம், காலணிகள், அனைத்தும் வெளியில் விட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பெண்கள் அணிந்து வந்த நகைகளை அனைத்தும் கழற்றிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கணினியில் தேர்வு எழுத உள்ளதால் ஹால்டிக்கெட் தவிர வேறு எந்த பொருளும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. நீட் தேர்வுக்கு நடந்தது போல கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் பட்டதாரிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கணினியில் 1 முதல் 150 கேள்விகள் கணினியில் வெளியிடப்பட்டது. அதிலே கீழே உள்ள விடைகளை கணினி மூலம் எழுதும் வகையில் கணினியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முன்னதாக இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டதால் எளிதாக தேர்வு எழுதினர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலத்தில் சாலை மறியல்

சேலம் அயோத்தியாபட்டணம் அடுத்த குப்பனூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், தேர்வு தொடங்கும் முன்னரே திடீரென மின்தடை ஏற்பட்டது. இதன்காரணமாக, காலை 9.30 மணியை கடந்தும் தேர்வுகள் தொடங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள், திடீரென சேலம்-அரூர் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

தாலிகளை கழற்ற சொல்லி வற்புறுத்தல்


குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் 5 மையங்களில் 4580 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக சோதனை நடத்தினர். சில இடங்களில் பெண்களிடம் தாலி செயினை கழற்றுமாறு கூறினர். ஆனால் சில பெண்கள் தாலி செயினை கழற்ற முடியாது என கூறி தேர்வு எழுதாமல் திரும்பி சென்றனர்.

Post Top Ad