தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு: ஒழுங்குமுறைச் சட்டத்தில் அறிவுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 23, 2019

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு: ஒழுங்குமுறைச் சட்டத்தில் அறிவுறுத்தல்





தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்குவது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைச் சட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மெட்ரிகுலேசன் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகள், மழைலையர் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவை உள்ளடங்கும்.


இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், போதிய கல்வித் தகுதியின்றி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அரசால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன.

மேலும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். அதே வேளையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் வழங்காமல் இருந்து வந்தனர்.

இந்தப் பிரச்னைகளால், சில தனியார் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தில், பணியாளரின் பணியமர்த்துதல் விதி, அவர்களின் பணி வரையறைகள் ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகள் திறம்பட செயல்படுவதற்கு தேவைப்படுபவர் என கருதும் பணியாளரை பணியில் அமர்த்தலாம். தனியார் பள்ளி பணியாளரின் சம்பளத்தை, படிகள் ஒவ்வொரு மாதத்தின் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.

இது தொடர்பாக பணியாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் தொடங்கும் தேதியன்று ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் பணி ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளாமல் இருந்தால், அத்தகைய பணி ஒப்பந்தம் இந்தச் சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து 6 மாத காலத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆய்வு அதிகாரிகளைத் தடுத்தால் சிறை: ஆசிரியர் பணிக்கு அரசு நிர்ணயம் செய்யும் கல்வித் தகுதிக்கு குறைந்தபட்ச தகுதிகள் கொண்டவர்களை தனியார் பள்ளிகளில் பணியமர்த்தக் கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாளரின் பதவி உயர்வு, சம்பளம், படிகள், விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, காப்பீடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பணியமர்த்தம் செய்யும் முறை, நிலை, எண்ணிக்கை மற்றும் வரைகளை அரசு நிர்ணயிக்கலாம்.

இந்தச் சட்டத்தின்படி பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அதிகாரம் பெற்ற அமைப்பால், யாரேனும் தகவலை அனுப்பாவிட்டாலும், தவறான தகவலை அளித்தாலும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர், தனியார் பள்ளியில் நுழைவதிலிருந்து வேண்டுமென்றே தடுக்கும் நபர் மீது மூன்று மாதங்கள் சிறை தண்டனையுடன் அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும் என ஒழுங்குமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Top Ad