கணினி வழித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 21, 2019

கணினி வழித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு அடுத்த வாரம் கணினி வழித் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான பயிற்சித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் மேற்கொள்ளுமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை1-பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் செப்.27, 28, 30 ஆகிய தேதிகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் தமிழகமெங்கும் 154 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளில் சுமார் 1.85 லட்சம் பேர் தேர்வெழுதவுள்ளனர். அனைத்து தேர்வுகளும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு கணினி வழித் தேர்வுகளாக மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போதுவரை 1.30 லட்சம் பேர் தங்களது நுழைவுச் சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர். பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சித் தேர்வினை முயற்சித்து வருகின்றனர்.
தேர்வு நடைபெறும் முறை: கணினி வழித்தேர்வுகளைப் பொருத்தவரை தேர்வுக்கான வினாக்கள் அவரவர்களுக்கென தேர்வு மையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைப்படி ஒன்று முதல் 150 வினாக்களும் கணினி திரையில் வெளிப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு வினாவாகவோ, வரிசையாகவோ அல்லது முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக உறுதி செய்த பின்னர் விடைக்குறிப்பினை பதிவேற்றம் செய்யவும், முழுத்தேர்வும் முடிந்த பின்னர் இறுதியாக அனைத்து வினாக் களுக்குரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சித் தேர்வுக்கு ஏற்பாடு: தேர்வர்களுக்கு கணினி வழித்தேர்வுகளில் முன் அனுபவம் ஏற்படுத்தும் வகையில் கடந்த 17-ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சித் தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தர்வுகளை தேர்வர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 25 நிமிஷ தேர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது எவ்வளவு கால அளவில் நிறைவு செய்யப்படுகிறது என்பதை அறியும் வகையில் கடிகார நேரம் இறங்கு முகமாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் கணினி வழித்தேர்வுக்கான பயிற்சியை மேற்கொள்ளுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Post Top Ad