இன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 16, 2019

இன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை



வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி தேதி. நிறுவனங்கள் டிடிஎஸ்) கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 30ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. படிவம் 16 வழங்க தாமதம் ஆகும் என்பதுதான் இதற்கு காரணம். அதற்காக இதை காரணம் காட்டி வருமான வரி கணக்கு தாக்கல் தேதியை தாமதம் செய்யக்கூடாது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. 

எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 2 வாரம்தான் உள்ளது. கெடு தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், காலதாமதமாக வருமான வரி கணக்கை அடுத்த ஆண்டு (2020) மார்ச் 31 வரையில் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரித்துறை மதிப்பீடு செய்வது எப்போது நிறைவுபெறுகிறதோ அதற்கு முன்னர், இதில் எது முன்னதாக இருக்கிறதோ அதற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.


 உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் அதன் பின்னர் 2019 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அவர்களுக்கு 5,000 அபராதம் விதிக்கப்படும். 2019 டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் 10,000 விதிக்கப்படும். ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டும் அபராதம் 1,000 விதிக்கப்படும். 

காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்தாமல் தப்பித்துவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.  அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் வரையில் செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் செலுத்த நேரிடும். மேலும், வருமான வரி சலுகைகள் பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.


நீங்கள், உங்களது வருமான வரி கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்துவிட்டால், உங்களுக்கு வருமான வரி பிடித்தம்போக மீதம் உள்ள தொகை (ரீபண்ட்) பெற விண்ணப்பித்தால், ரீபண்ட் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.  மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டில் உங்களது வருமானத்திற்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெற வருமான வரி சட்டம் 1961 பிரிவு 244ன்கீழ்  விண்ணப்பம் செய்கிறீர்கள். 

அப்போது, நீங்கள் காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தீர்கள் என்றால், ரிபண்ட் தொகைக்கு வட்டியைப் பெற முடியாது. அதை இழக்க நேரிடும். தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால், சட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இது 2 ஆண்டுகள் வரையிலும் நீடிக்கப்படலாம். உங்களது வரி பாக்கி 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் சிறை தண்டனை 7 ஆண்டுகள் வரையில் நீடிக்கப்படலாம் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

Post Top Ad