அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் ஐடியா - அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து உதவுகின்றனர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 19, 2019

அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் ஐடியா - அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து உதவுகின்றனர்



தன்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து முதலில் செடியை நட்டு, புதிய முறையில் அதற்கு தண்ணீர் கொடுப்பதை பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து அந்த தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை ஊற்றிவிட்டுச் செல்கின்றனர்.


மரம் நட்டால் மழை பெய்யும்… மரம் இல்லையேல் உயிர்கள் இல்லை… இப்படியான வாசகங்களைக் கேட்டுவிட்டு நகர்ந்து செல்பவர்களே அதிகம். அதிலும், சிலர் மரக் கன்றுகளை நடுகிறார்கள். அதிலும் வெகு சிலரே நடப்பட்ட மரக் கன்றுகள் பெரிய மரமாகும் வரை தினம் தினம் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறார்கள். அதிலும், இந்தக் கோடைக்காலத்தில் தினமும் செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கும் அப்படியான வெகுசில அரிய மனிதர்களில் ஒருவர்தான் தேனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பெருஞ்சித்திரன்.




பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையின் இரு புறமும் செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார் பெருஞ்சித்திரன். வழக்கமாகச் செடிக்கு தண்ணீர் ஊற்றும் முறையிலிருந்து மாறுபடும் பெருஞ்சித்திரன், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் டியூப்களை எடுத்துவந்து பாட்டில்களுடன் இணைத்து, அதன் மறு முனையைச் செடியின் வேர் பகுதியில் செலுத்திவிடுகிறார். கிட்டத்தட்டச் சொட்டுநீர் பாசனம்போல மெல்லச் செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும். ஒரு முறை நிரப்பினால், மூன்று நாள்களுக்கு செடிக்குத் தண்ணீர் சென்றுகொண்டேயிருக்கும்.




தன்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து முதலில் செடியை நட்டு, புதிய முறையில் அதற்குத் தண்ணீர் கொடுத்து வந்தார். அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து அந்தப் பாட்டில்களில் தண்ணீரை ஊற்றிவிட்டுச் செல்கின்றனர்.


”என் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து நீரோ என்ற இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். இயற்கையின் நண்பர்கள் என மாணவர்களை மட்டும் வைத்து ஓர் அமைப்பையும் செயல்படுத்திக்  கொண்டிருக்கிறோம். அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இவையெல்லாம் வேலையா என ஆரம்பத்தில் நிறைய பேர் என்னைக் கிண்டல் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கோடை நல்ல பாடம் கற்றுக்கொடுத்திருக்கும். மரங்கள் இல்லாமல் தேனியின் பல பகுதி மிகுந்த சிரமத்தைச் சந்தித்தது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டார்கள். அதிலும் புதிய பேருந்துநிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலான சாலையில் ஒரு மரம்கூட இல்லை.



பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வர வேண்டுமென்றால்கூட வெயிலில்தான் நடந்துவர வேண்டும். அப்படியான ஒரு சூழலை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் சாலையில் இரு புறமும் மரங்கள் நட்டோம். தேனியின் பல பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு தினமும் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து மரமாக மாற்றியிருக்கிறோம். அந்த வகையில், இந்தத் திட்டச்சாலையை எப்படியாவது பசுமைச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலில் ஆரம்பித்தோம். சற்று வித்தியாசமாகச் செய்ய வேண்டும். அதில், பொதுமக்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மனித உடலுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதுபோல செடிக்குத் தண்ணீர் கொடுக்கும் முறையைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம்போல தண்ணீர் கொடுக்க முயற்சி செய்தோம். முதலில் இது வொர்க்கவுட் ஆகுமா என்றெல்லாம் தெரியாது. முயற்சி செய்து பார்த்தோம். சரியாக வேலை செய்தது. இதைப் பார்த்த பலரும், எங்களோடு சேர்ந்துகொண்டு, தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இல்லையென்றால் அவர்களாகவே தண்ணீர் ஊற்றிவிட்டுச் செல்கிறார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் புன்னகையோடு.



கொடிக்கால், நாவல், புங்கை, வேம்பு, வாதமரம் உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகளை இந்தச் சாலையில் நடப்பட்டு நன்கு வளர்ந்துவரும் நிலையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையில் மரங்கள் நடும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர் பெருஞ்சித்திரனும் அவரின் மாணவர்களும்.

வாழ்த்துகள் ஆசிரியரே!

Post Top Ad