மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 24, 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்




முப்பது ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணித் தகுதியை ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், இந்திய ரயில்வேயில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. தெற்கு ரயில்வேயில் சுமார் 18 ஆயிரம் ஊழியர்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த உத்தரவை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணி முடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு பணித்தகுதி ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை பணியாளர், பொது குறைபாடு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் செயலாளர் சூரிய நாராயண் ஜா கடந்த 20-ஆம் தேதி பிறப்பித்தார்.

அனைத்து ஏ, பி மற்றும் சி பிரிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

மாதந்தோறும் 15-ஆம் தேதி குரூப் வாரியாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எத்தனை பேர் ஆய்வு செய்யப்பட்டார்கள், எத்தனை ஊழியர்கள் கட்டாயப் பணி ஓய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள், எத்தனை ஊழியர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்கள் என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை விதிகள் 1972 பிரிவு 56(ஜெ)-யின் கீழ் நிர்வாகத்தை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிமுறைகளுக்கு 2014, 2015, 2017-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த உத்தரவுகளைப் பின்பற்றவேண்டும். இந்த உத்தரவுப் படி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணிமுடித்த அல்லது 56 வயதானவர்கள், பணித்தகுதி இல்லாத மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்தோ அல்லது மூன்று மாத ஊதியம் மற்றும் படிகள் கொடுத்து உடனடியாகவோ கட்டாய பணி ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் ஆய்வு: நாட்டில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 47 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். குறிப்பாக, இந்திய ரயில்வேயில் கட்டாய பணி ஓய்வு வழங்கும் உத்தரவால், சுமார் 3 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: இந்திய ரயில்வேயில் தற்போது 12 லட்சத்து 46,500 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 11,500 பேர் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள். கட்டாய பணி ஓய்வு வழங்கும் திட்டத்துக்காக நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் பணித் தகுதி ஆய்வு செய்யப்படவுள்ளது.

பல துறைகளில் தனியார்மயத்தைப் புகுத்த ஆள்குறைப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது. அதற்காக கட்டாய ஓய்வு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஓய்வு வயது 58 ஆக குறைத்தால் ஒரே நேரத்தில் பணிக்கொடை வழங்க இயலாது. இந்த உத்தரவு மூலம் படிப்படியாக நிறைவேற்ற இயலும். எனவே, பணித்தகுதியைக் காரணம் காட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் உத்தரவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் அவர்.

18 ஆயிரம் ஊழியர்கள்: தெற்கு ரயில்வேயில் தற்போது மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 484 ஊழியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது 82,292 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 20,193 காலியிடங்கள்உள்ளன. 30 ஆண்டுகள் பணிமுடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு பணித்தகுதி ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்கும் உத்தரவில் சுமார் 18 ஆயிரம் ஊழியர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு படிப்படியாக வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. இந்த உத்தரவின் அறிக்கை ரயில்வே தலைமை தொழிலாளர் நலத்துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அவர் மூலமாக ஒவ்வொரு கோட்டத்துக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அடுத்த 2 மாதங்களில் இந்த திட்டத்தின்கீழ் ஊழியர்களின் பணித்தகுதியை ஆய்வு செய்து படிப்படியாக பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட உத்தரவு என்றால் அந்த உத்தரவு ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தும். இதில் வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை என்றார் அவர்.

சமூகப் பிரச்னையை உருவாக்கும்: இது குறித்து அனைத்து ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நைனா மாசிலாமணி கூறியது: ரயில்வே துறையில் ஏற்கெனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 30 ஆண்டுகள் பணி முடித்த, 55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் ரயில்வே துறையில் அமல்படுத்தப்பட்டால் பாதிப்பு ஏற்படும். பயணிகள் குறைவாக இருந்தால் ஆள்கள் குறைப்பு செய்யலாம். ஆனால், மிகுதியான பயணிகள் உள்ள நிலையில், ரயில்வே துறையில் ஆள்கள் குறைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரயில்வே பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மேலும், ஆள்குறைப்பு செய்வதால், சமூகப் பிரச்னை ஏற்படும். இந்த உத்தரவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றார் அவர்.

Post Top Ad