அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 16, 2019

அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட  தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள், பதிவான தபால்  ஓட்டுகள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. 

சிறு பிழைகள் போன்ற காரணங்களுக்காக கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களான போலீசார் பதிவு செய்த 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் மற்ற அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. 


 அரசு ஊழியர்கள் 1 லட்சம் பேர் தபால் வாக்களிக்கவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது. இதன்மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்களிக்களிப்பதற்கான படிவங்கள் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். 

இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி, ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தமிழக அரசிற்கு எதிராக வாக்களிப்பாளர்கள் என்ற எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு முரணானது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்டசமாக செயல்பட்டுள்ளது என்றார். 

இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். காரசார வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள், ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது. வாக்களிப்பது மக்களின் உரிமை. எனவே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  எத்தனை  தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது உள்ளிட்ட விவரங்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Post Top Ad