வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... மற்றும் அதன் நன்மைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 19, 2019

வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... மற்றும் அதன் நன்மைகள்

சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.



வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... ரெசிப்பிகள்!


ஏப்ரல் மே மாதங்களில் நம் வீடுகளின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். வேப்ப இலை மட்டுமல்லாது பூவும் வெயில் காலத்தில் உடலுக்குப் பல மடங்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. வேப்பம் பூவை எப்படிச் சேகரிப்பது, பராமரிப்பது, எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ளமுடியும், என்ன நன்மைகள் இருக்கிறது என்பது போன்ற தகவல்களைத் தருகிறார் சமையற்கலைஞர் அன்னம்.

சேகரித்தல் - பாதுகாத்தல்:

குறிப்பிட்ட சமயத்தில்தான் வேப்பம் பூ சீஸன் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரம், மே மாதங்களில் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான பூவைச் சேகரித்து வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் வீட்டின் அருகிலேயே வேப்பம் மரம் இருக்கிறது எனில் பூக்களை நேரடியாக மரத்திலிருந்து பறித்து நிழலில் உலர்த்திக் காய்ந்ததும் ஒரு பாட்டிலில் போட்டுச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். மரத்திலிருந்து கீழே விழும் பூவைச் சேகரிக்கிறீர்கள் எனில் சுத்தமான தண்ணீரில் கழுவி நிழலில் காயவைத்துச் சேகரிக்கலாம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பூவை மாதம் ஒரு முறை லேசான வெயிலில் காயவைத்து மீண்டும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.




வேப்பம் பூ ரெசிப்பிகள்:

பச்சடி:

தேவையானவை: 

வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

புளி - சின்ன நெல்லிக்காய் அளவு

நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

நெய் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்




செய்முறை :

புளியைக் கெட்டியாகக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதனுடன் புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிக்கரைசலின் நிறம் சற்று மாறியதும், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளிக்கரைசல் கெட்டியானதும் வேப்பம் பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கெட்டியாக்கி இறக்கவும். வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய இந்தப் பச்சடி அதிக அளவு கசப்புத் தன்மை இன்றி இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வேப்பம் பூ துவையல்:

ரெசிப்பி



தேவையானவை:

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 3

புளி- சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு - கால் டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

வேப்பம் பூ - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்



செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல் ,காய்ந்தமிளகாய், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். தோசைக்கு மிகச்சிறந்த சைட் டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

டிப்ஸ்:

டிப்ஸ்



வேப்பம் பூவை பதப்படுத்த முடியாதவர்கள் சீஸனின் போது பூவை சேகரித்துக் காயவைத்து பொடி செய்து வைத்துப் பயன்படுத்தலாம்.

வழக்கமாக நாம் செய்யும் ரசத்தில் வேப்பம் பூ அல்லது வேப்பம் பூ பொடியைத் தூவி இறக்க ரசம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

வேப்பம் பூ உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று என்பதால் மோரில் சேர்த்து தினமும் பருகலாம்.

சீஸனில் அதிகமான வேப்பம் பூ கிடைக்கிறது என்பவர்கள் உப்பு கலந்த மோரில் வேப்பம் பூவை ஊறவைத்து, வெயில் காயவைத்து வேப்பம் பூ வத்தலாக எண்ணெய்யில் பொரித்து எடுத்துப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

Post Top Ad