இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது: உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 23, 2019

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது: உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்


இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும்1 லட்சம் மாணவர்கள் சேருவதற்கு அரசு ரூ.100 கோடி அளித்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது.

இதுதொடர்பாக உடனடிநடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இது, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக இருக்கும்.இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தில் 25 சதவீத மாணவர் சேர்க்கையை அந்தந்த பள்ளி நிர்வாகமே மேற்கொண்டு அதைஅரசு கண்காணிக்க வேண்டும். ஆனால் அரசாங்கமே முன்னெடுத்து ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களைத் தேர்வு செய்து தனியாருக்கு தாரை வார்ப்பதோடு மானியத் தொகை ரூ.100 கோடி வழங்கப்பட்டு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படி அதிகரிக்கும்?


உள்கட்டமைப்பு மேம்பாடு

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஏற்றம் பெறச் செய்திட அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தரமான பாடத்திட்டம் தயாரித்தால் மட்டும் போதாது. அதைச் செயல்படுத்தும் விதமாக பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கியூ.ஆர். (Q.R.) எனும் புதிய முறையைச் செயல்படுத்திட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்திட வேண்டும். மேலும்,2017-ம் ஆண்டு பள்ளிக் கல்வி அமைச்சர் நடத்திய ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 3,000 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்படும் என அறிவித்ததை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.


மேலும் போதிய இடவசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுடன் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தரமான கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகளை காப்பாற்றிடவும், இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அரசு தேர்வு செய்து கொடுப்பதைக் கைவிட வேண்டும்.

இவ்வாறு இளமாறன் கூறியுள்ளார்.

Post Top Ad