ஏப்.19-இல் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 11, 2019

ஏப்.19-இல் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என்றும்,  இது தொடர்பாக இணையதளங்களில் பரவும் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும் அரசுத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-இல் வெளியிடப்பட உள்ளன.இதனிடையே, மக்களவைத் தேர்தல் மற்றும் விடைத்தாள்திருத்தும் பணிகள் முடிவடையாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரம் தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் தகவலை தேர்வுத்துறை மறுத்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது:  திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஓரிரு நாள்களில் முடிவடையும்.தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும்.பெரும்பாலான முகாம்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆசிரியர்களின் தொடர் உழைப்பால் அனைத்துத் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நாள்களில் வெளியிடப்படும்.


தேர்வெழுதிய 27 லட்சம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திமூலம் அனுப்பப்படும். அரசு இணையதளம் வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தேர்தல் பணிகள் காரணமாக சிரமங்களைத் தவிர்க்க பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தள்ளி வைக்க அரசு விரும்பியது. ஆனால், பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதால் அதற்கான அவசியம் இருக்காது என்றனர்.

Post Top Ad