10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது : ஏப்.11க்குள் திருத்தி முடிக்க திட்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 3, 2019

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது : ஏப்.11க்குள் திருத்தி முடிக்க திட்டம்!





பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆயிரம் ஆசிரிய ஆசிரியைகள் குவிந்தனர். ஏப்.11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நேற்று  துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் பாளை  சின்மயா மேல்நிலைப் பள்ளி மற்றும் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாளை சின்மயா பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்தனர்.

இவர்களில் முதற்கட்டமாக 640 பேருக்கு விடைத்தாள் திருத்தும் பணி வழங்கப்பட்டது. மேலும் 60 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர்களும் காலை, மாலை என சராசரியாக 30 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பாடங்களுக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அறைகளில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலா, விடைத்தாள் திருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் விஜயலட்சுமி முன்னிலையில் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். வரும் 11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு கிடைக்கவில்லை...

நெல்லை மாவட்டத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்தவர்களில் பலருக்கு பணிமூப்பு அடிப்படையில் விடைத்தாள் திருத்த வாய்ப்பு வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். தனியார் பள்ளி ஆசிரியைகள் பலர் விடைத்தாள் திருத்த வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்து புலம்பியபடி திரும்பிச் சென்றனர். இதுகுறித்து கல்வித்துறையினர் கூறுகையில், முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்து ஆய்வாளர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் அழைக்கப்பட்டு முதல் நாளில் வந்தவர்களுக்கு விடைத்தாள் திருத்த முறைப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டது. விடைத்தாள் திருத்த தேவையான எண்ணிக்கையில் நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Post Top Ad