வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 18, 2019

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.  ஆகவேதான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று பலரிடம் யோசனை கேட்பதும், கூகுளில் தேடுவதும், புத்தகங்களைப் புரட்டுவதுமாக இருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை அமையவேண்டும்.
அவற்றை சரியாகத் திட்டமிட வேண்டியது அவசியம்'' என்று சொல்லும் உணவியல் வல்லுநர் ஷைனி சுரேந்திரன், அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார். ``உடல் ஆரோக்கியமாக இருக்க நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

அதேநேரத்தில் உணவுப் பழக்கமும் மிக முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நம் உடலுக்குத் தேவையான அளவு உணவு உண்ணவில்லை என்றால் நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, நாம் சாப்பிடும் உணவுதான் உடற்பயிற்சி செய்வதற்கான வலிமையைக் கொடுக்கும். உதாரணமாக ஒரு வீடு தரமாக, உறுதியாகக் கட்டப்பட வேண்டுமானால் அதன் மூலப்பொருள்கள் தரமாக இருக்கவேண்டும். 


அந்தவகையில் உடற்பயிற்சி, யோகா, நடனம் என எதுவாக இருந்தாலும் அதற்கு உணவு என்ற மூலப்பொருள் மிக முக்கியம். ஒருவர் சரியாகச் சாப்பிடாமல் எந்தவிதமான உடல் உழைப்பும் செய்யமுடியாது. தேவையான சத்துகள் இல்லையென்றால் சோர்வடைந்து விடுவர். மேலும் நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு நீராகாரமும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். எனவே, மறக்காமல் நம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். 

உணவுமுறை என்னும்போது, நாம் வசிக்கும் இடத்தில் விளையாடக்கூடிய, அப்பகுதி மக்கள் உண்ணக்கூடிய பாரம்பர்ய உணவுகளாக இருப்பது நல்லது. தென்னிந்தியர்கள் தினை, சம்பா, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துவர். வயது மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்கு ஏற்ப உணவுமுறைகள் மாறும். ஒருசிலர் ஜிம்முக்குப் போகாமல் காலையில் சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது என அவர்களது வசதி, நேரம் மற்றும் உடலுக்குத் தகுந்தவாறு உடற்பயிற்சிகளைச் செய்வார்கள். உதாரணமாக, `கனா' படத்தில் நடிப்பதற்காக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு கிரிக்கெட் வீராங்கனை போன்று தயார் செய்தேன். 


அப்போது பள்ளி செல்லும் குழந்தையாகவும், வளர்ந்த பெண்ணாகவும் தோற்றமளிக்கும்விதமாக அவருக்கு சில உணவுமுறைகளைப் பரிந்துரைத்தேன். மொத்தத்தில் நான் கூறுவது ஒருவரது தேவை, வாழ்க்கைமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே உணவுமுறை பின்பற்றப்படவேண்டும். நாம் சாப்பிடும் தட்டைப் பாதியாகப் பிரித்து, ஒரு பாதி உணவு எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளாக இருக்கவேண்டும். மறுபாதி ஏதேனும் தானிய வகை உணவுகள், சாதம் மற்றும் நம்முடைய பாரம்பர்ய உணவாக இருக்கவேண்டும். இதில் சைவம் சாப்பிடுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். 

புரதச்சத்தின் அளவு சற்று கூடுதலாக இருப்பது நல்லது. இவ்வாறு உணவுமுறை, உடற்பயிற்சி எனத் தொடர்ந்து செய்யும்போது உடலில் மிக எளிதாக நீரின் அளவு குறைந்துவிடும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும். எனவே, வாரத்துக்கு இரண்டுமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ், தயிர் பச்சடி மற்றும் புடலங்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை உடல் சூட்டைக் குறைக்க உதவும். நம்முடைய வாழ்க்கைமுறையும் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, கைப்பேசி பயன்படுத்துவது, மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களால் உடலில் சூடு அதிகரிக்கும். அதேபோல் நாம் உடுத்தும் உடைகூட சூட்டை அதிகரிக்கச் செய்யும். 


இதற்கு நம்முடைய கலாசார உடைகளான புடவை, வேட்டி அல்லது லுங்கி அணிவதன்மூலம் உடலுக்குக் காற்றோட்டம் கிடைக்கும். இன்னும் சில வாரங்களில் அக்னி நட்சத்திரத்தைச் சந்திக்க இருக்கிறோம். எனவே, உடலில் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. வளரும் தலைமுறைக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், உங்களுக்கு எந்தமாதிரியான உடற்பயிற்சி பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். 

அப்போதுதான் எந்தச் சூழலிலும் தவறாமல் அதைத் தொடர்ந்து செய்யமுடியும். அத்துடன் தேவைப்பட்டால் உணவியல் நிபுணரிடமோ அல்லது உடற்பயிற்சியாளரிடமோ ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம். இதுபோன்ற வாழ்க்கைமுறையைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதற்கும் காலநிர்ணயம் செய்யவேண்டாம். ஏனென்றால் அது பல நேரங்களில் தோல்வியைக் கொடுக்கும். மாதத்துக்கு ஒரு உணவு கட்டுப்பாட்டை உருவாக்குங்கள். பிறகு அதுவே உங்களின் உணவுமுறையாக மாறிவிடும்" என்கிறார் ஷைனி சுரேந்திரன். நமக்குப் பிடித்த செயலை சரியாகச் செய்தால் நம் உடலுக்கும், மனதுக்கும் நிச்சயம் நன்மை கிடைக்கும்.

Post Top Ad