முடிவுக்கு வருகிறது 'விண்டோஸ் 7'- அடுத்து என்ன செய்ய வேண்டும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 26, 2019

முடிவுக்கு வருகிறது 'விண்டோஸ் 7'- அடுத்து என்ன செய்ய வேண்டும்?



நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்துபவர் என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இதை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஏனெனில், 2020 ஜனவரி 14 ம் தேதியுடன் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆதரவை நிறுத்திக்கொள்ளப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விண்டோஸ் 7 பயனாளிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியமாகிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மைக்ரோசாப்டின் விண்டோஸ் திகழ்கிறது. எம்.எஸ்.டாஸ் மூலம் அறிமுகமான மைக்ரோசாப்ட் 1985 ம் ஆண்டு விண்டோஸ் இயங்குதளத்தை முதலில் அறிமுகம் செய்தது. அதன் பிறகும் விண்டோஸ் பல வெர்ஷன்களில் வெளியாகி கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது.

விண்டோஸ் 95, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 உள்ளிட்ட வெர்ஷன்களில் விண்டோஸ் இடைப்பட்ட ஆண்டுகளில் வெளியாகி இருக்கிறது. இந்த வரிசையில் விண்டோஸ் 10 லேட்டஸ்ட்டாக இருக்கிறது. எதற்கு இந்த நினைவூட்டல் பட்டியல் என்றால், பழையன கழிதலும் புதியன புகுதலும் போல, புதிய வெர்ஷன்கள் அறிமுகமான பின் பழைய வெர்ஷன்கள் மூடுவிழா காணப்படும் என்பதற்காக தான். அந்த வகையில் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான விண்டோஸ் 7 வெர்ஷனுக்கு மூடுவிழா நேரம் வந்திருப்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.




உண்மையில் மைக்ரோசாப்ட் அறிவிப்பையும் நினைவூட்டல் என்றே வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் விண்டோஸ் 7 கடந்த சில ஆண்டுகளாகவே நீட்டிக்கப்பட்ட ஆதரவில் தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆதரவும், 2020 ஜனவரி மாதத்துடன் விலக்கிக் கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஆதரவை விலக்கிக் கொள்வது என்றால், அதன் பிறகு விண்டோஸ் 7 இயங்காது என பொருள் இல்லை. விண்டோஸ் 7 தொடர்ந்து இயங்கவே செய்யும். ஆனால், அதற்கான மென்பொருள் ஆதரவை நிறுவனம் நிறுத்திக்கொண்டு விடும். இதனால் இந்த வெர்ஷனுக்கான மென்பொருள் மேம்பாடோ, வைர்ஸ் தடுப்பு தீர்வுகளோ தொடராது.


இதன் உண்மையான பொருள் இயங்குதளம் தொடர்பான எந்த பிரச்சனை வந்தாலும் பயனாளிகளோ பொறுப்பு – நிறுவனம் அதற்கு எந்த உதவியும் அளிக்காது. எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 7க்காக காலம் முடிய இருப்பதை பல மாதங்களுக்கு முன்பே நினைவூட்டியிருக்கிறது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில், நிறுவனமே கைவிடப்பட்ட வெர்ஷனை தொடரும் போது, வைரஸ், மால்வேர் தாக்குதல்களுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம் இருப்பது தான். இப்படி வைரஸ் வில்லங்கமே எதேனும் உருவானால் மைக்ரோசாப்ட் அதற்கான அதிகாரப்பூர்வ தடுப்பை வழங்காது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க விரும்புகிறவர்கள், மேம்பட்ட வடிவமான விண்டோஸ் 10 க்கு மாறிக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. “10 ஆண்டுகளுக்குப்பிறகு, விண்டோஸ் 7க்கான ஆதரவு 2020 ஜனவரியில் முடிவுக்கு வருகிறது,” என நிறுவனம் தெரிவித்துள்ளது.



“விண்டோஸ் 7 இயங்குதளத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும், மென்பொருள் ஆதரவு, பாதுகாப்பு ஆதரவு இல்லாத நிலையில், இந்த பயன்பாடு வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கு அதிகம் இலக்காகும் ரிஸ்க் கொண்டது,” என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது. விண்டோஸ் 7 தொடர்பான அப்டேட்களை பெற்று வருபவர்கள் இந்த அறிவிப்பையும் அப்டேட்டாக பெற்றிருக்கலாம். 

இனி இதை நிறுவனம் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்க திட்டமிட்டுள்ளது. அதாவது விண்டோஸ் 7 நிறுத்தப்பட இருப்பதையும், புதிய வெர்ஷனுக்கு மாற வேண்டிய அவசியத்தையும் நிறுவனம் அடிக்கடி கம்ப்யூட்டரில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். பயனாளிகளால் சோம்பலால் மறந்துவிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. விண்டோஸ் 7 தொடர்பான நினைவூட்டல் தோன்ற வேண்டாம் என நினைத்தால், முதல் முறை வெளியாகும் அப்டேட்டில், அளிக்கப்பட்டுள்ள, மீண்டும் இதை காண்பிக்க வேண்டாம் எனும் வாய்ப்பை தேடிப்பார்த்து கிளிக் செய்ய வேண்டும்.


 இதன் மூலம் நினைவூட்டலுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடலாம் என்றாலும், பயனாளிகள் விண்டோஸ் 10க்கு மாறுவதா வேண்டாமா என்பது பற்றி தீர்மானித்துக் கொள்வது நல்லது. வருவது வரட்டும், பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பவர்கள், சொந்த ரிஸ்கில் பயன்பாட்டை தொடரலாம். இல்லை ரிஸ்க் வேண்டாம் என நினைப்பவர்கள் விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக்கொள்ளலாம்.


விண்டோஸ் 10க்கு மாறுவது என தீர்மானித்தால், எப்படி மாறுவது, மாறினால் பழைய கோப்புகள் என்னாகும்? போன்ற கேள்விகள் எழலாம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விரிவான தகவல் பக்கத்தை உருவாக்கியுள்ளது. அதில் தகவல்களை பேக்கப் செய்வது உள்ளிட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் விர்ச்சுவல் டெஸ்க்டாப்பின் பொதுமக்கள் முன்னோட்ட வடிவை அறிமுகம் செய்துள்ளது. கிளவுட்டில் இயங்கக் கூடிய விண்டோஸ் என இதை புரிந்து கொள்ளலாம்.


இதை ரிமோட் டெஸ்க்டாப் என்றும் வைத்துக்கொள்ளலாம். விண்டோஸ் 7 இயங்குதளத்தை தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். இந்த தொழில்நுட்பம் டெஸ்க்டாப் செயல்பாடுகளை அஸ்யூர் கிளவுட் சேவைக்கு கொண்டு செல்வதால், அதில் தொடர்ந்து பயன்படுத்தி மென்பொருள் ஆதரவையும் பெறலாம்

Post Top Ad