லஞ்சம் வாங்கினால் தூக்கு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 27, 2019

லஞ்சம் வாங்கினால் தூக்கு!






லஞ்சம் வாங்குவோரைத் தூக்கிலிட வேண்டும் அல்லது அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை சூர்யா நகரைச் சேர்ந்த பரணிபாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். “மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது. இதுகுறித்த விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி என்று தெரியவில்லை. அதற்குள்ளேயே, ஒரு பணிக்கு ஐந்து பேர் வீதம் 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதனால், உதவிப் பொறியாளர் நியமன நடைமுறை மற்றும் நியமன உத்தரவு வழங்கத் தடை விதிக்க வேண்டும். உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (பிப்ரவரி 25) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, “தேர்வு மையங்களில் செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் அனுமதிக்காத நிலையில், தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும் அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? இதனால் மின் வாரிய உதவிப் பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. சிசிடிவி, கேமரா, செல்போன் பயன்பாடுகளால் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

இது போன்று கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்சம் வாங்கும் பழக்கம் ஒழியும் என்றும், லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும் என்றும் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post Top Ad