அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 18, 2019

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்

'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரடியாக வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

பரஸ்பர அடிப்படையில் மட்டும், சம்பந்தப்பட்ட துறை தலைமையிடம், அனுமதி பெற்று வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டத்தை பின்பற்றி, தமிழக அரசு, புது அரசாணை பிறப்பித்துள்ளது.இந்த அரசாணை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வாயிலாக, அரசின் பல்வேறு துறைகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊழல் தடுப்பு சட்டம், 1988ல், மத்திய அரசு, '17 - ஏ' என்ற, பிரிவை இணைத்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், ஊழல் தடுப்பு சட்டத்தில், புதிய பிரிவை சேர்த்துள்ளது.இதன்படி, அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ள, குரூப் - ஏ, பி, சி மற்றும் டி பிரிவில் உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு புகார்கள் வந்தால், அதுகுறித்து, துறை தலைமைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தர வேண்டும்.புகார் அனுப்பியவர்களிடம், புகாருக்குரிய விளக்கம் மற்றும் ஆதாரங்களை பெற வேண்டும். 

அவ்வாறு, ஆதாரத்தை தர தவறினால், அந்த புகாரை ஆதாரமற்றதாக கருத வேண்டும். புகார்தாரர்களின் விளக்கம் கிடைத்து, புகார் உறுதியானால், அதன் மீது, போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க கூடாது.சம்பந்தப்பட்ட துறையின் தலைமைக்கு தகவல் அளித்து, உரிய அனுமதி பெற வேண்டும். அதற்கு முன், துறை தலைமை வழியாக, புகாருக்குள்ளானவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகே, போலீசார் விசாரணையை நடத்தலாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Post Top Ad