அரசு பள்ளியில் ஆச்சர்யம்..! "தண்ணீர் பெல்" திட்டத்திற்கு குவியுது பாராட்டு..! அசத்தல் நிகழ்வின் பின் அற்புதம்..! - Asiriyar.Net

Post Top Ad

Friday, February 15, 2019

அரசு பள்ளியில் ஆச்சர்யம்..! "தண்ணீர் பெல்" திட்டத்திற்கு குவியுது பாராட்டு..! அசத்தல் நிகழ்வின் பின் அற்புதம்..!திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டியை அடுத்த கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதற்காக தினமும் 3 முறை தனியாக மணி அடித்து ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

மனித உடலில் பெரியவர் களுக்கு 50 முதல் 60 சதவீத மும், குழந்தைகளுக்கு 70 முதல் 75 சதவீதமும் தண்ணீர் நிறைந் துள்ளது. உடல் உறுப்புகள் சீராக செயல்பட தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டுமென மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பெற்றோர்களோ, ஆசிரியர்களோ கட்டாயப்படுத்தினால் தான் குழந்தைகள் தண்ணீரை அருந்துவார்கள். தண்ணீர் அருந்தாததன் காரணமாக உடல் உறுப்புகள் சீராக செயல்படாமல், சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்புகள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன.


எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளியில் தினமும் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தார் கருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ்.

மாணவர்கள் தண்ணீரை அருந்த வைக்க சக ஆசிரியர் களுடன் கலந்தாலோசித்து, வகுப்பறையிலேயே மாணவர்கள் தண்ணீர் அருந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து, இப்பள்ளியின் தலைமையாசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: இந்த பள்ளியில் கருங்குளம், பாம்பாட்டி பட்டி, மண்பத்தை, மணியாரம்பட்டி, வையம்பட்டி, செக்கனம், அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 6 முதல் பிளஸ் 2 வரையில் 647 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 27 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாணவ, மாணவிகள் பெரும் பாலான நேரத்தை பள்ளியில்தான் செலவிடுகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்காக எழுந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தாகம் எடுத்தால் கூட தண்ணீரை அருந்துவதில்லை. குறிப்பாக மாணவிகள் சரியாக தண்ணீர் அருந்துவதில்லை.

எனவே, தண்ணீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தி, தினமும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது ஒரு பாட்டிலில் தண்ணீர் கொண்டு வருவதைக் கட்டாயமாக்கி, அதை வகுப்பறையில் உரிய இடைவெளியில் குடிக்க வேண்டுமென அறிவுறுத்தினோம். அதற்கென பள்ளி வேலைநேரத்தில் காலை 10.30 மணி, பகல் 12.50 மணி, பிற்பகல் 2.10 மணி என 3 முறை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக தனியாக மணியை ஒலிக்கச் செய்கிறோம். அந்த நேரத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வகுப்பில் உள்ள ஆசிரியர் முன்னிலையிலேயே தேவையான அளவுக்கு குடித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த முறையை கடைப்பிடித்து வருகிறோம். தற்போது மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் தண்ணீரை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எவர்சில்வர் பாட்டில்களை வழங்க முடியுமா என்றும் யோசித்து வருகிறோம்.

பள்ளியில் பாழடைந்து கிடந்த ஒரு அறையை தூய்மை செய்து, அதை நூலகமாக மாற்றியுள்ளோம். அங்கு நாளிதழ்கள் மற்றும் நூல்களை வைத்துள்ளோம். மாணவ, மாணவிகள் ஓய்வு நேரத்தில் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

இந்த பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், தற்போது டேங்கர் லாரியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்துத் தந்தால் அது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.


Recommend For You

Post Top Ad