மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 8, 2019

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது




பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்று கைதானார்கள். இதனால் அரசு துறை பணிகள் மட்டுமின்றி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.


பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த 1529 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித்துறை நியமித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் மற்றும் 17-பி விதியின்படி மெமோ வழங்கப்பட்டன.

இதற்கிடையில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 8 நாட்கள் வரை போராட்டத்தை நீட்டித்து கொண்டு சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டத்தை கைவிட்டாலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அறிவித்தது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

வேலை நிறுத்த காலத்தில் எத்தனை நாட்கள் பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


தொடக்க கல்வி துறையில் 95 ஆயிரம் பேரும், பள்ளி கல்வி துறையில் 80 ஆயிரம் பேரும் போராட்டத்தில் கலந்து கொண்ட புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 17-பி ‘மெமோ’ வழங்கப்பட்டன. பலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. 1529 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 3 வகையான நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படுகின்றன.

சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு தாங்கள் இதுவரையில் பணி செய்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் 17-பி ‘மெமோ’ -வின்படி 2 வருடத்திற்கு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது. இதுதவிர 3 வருடத்திற்கு பதவி உயர்வு பட்டியலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.


ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வரிடம் கலந்து பேசி இதுபற்றி ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கையை கைவிட வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கல்வித்துறை நடவடிக்கைக்கான அனைத்து முழு விவரங்களையும் சேகரித்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா? கைவிடுமா? என்பது ஒருசில நாட்களில் தெரிய வரும்.

Post Top Ad