2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 2, 2019

2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!





என முன் மாதிரியானபள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது."

``கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்" நம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள அரசு ஒதுக்கியுள்ளது.

அதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இது எப்படிச் சாத்தியமானது என்பதை, கேரளாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகவும், பாடக் குழுவிலும் பணியாற்றியவரான ராஜேந்திரன் தாமரபுரா அவர்களிடம் பேசினேன். ``அரசுப் பள்ளியை நோக்கிப் பெற்றோர்களை வரவழைத்த கேரள அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு' என்று தெரிவித்திருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் எனமுன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்களின்மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாட்டை மாநிலம் முழுக்கப் பரப்புவதற்கு அரசு நினைக்கிறது.


பெற்றோர்களின் மன மாற்றத்திற்கு முன் மாதிரிபள்ளியை விடவும் முக்கியமானது `படனோள்சவம்'. அதாவது, பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் அல்லவா? அதுபோலத்தான். ஆனால், வெறுமனே கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாமல், ஒரு மாணவன்அந்த ஆண்டு கற்றதை, செய்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமான கல்விக் கண்காட்சியாக `படனோள்சவம்'  விழாக்கள் அமைந்திருக்கும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணம், கேரள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே உள்ள புரிதல். கற்பிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் குணம். பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது.


இதற்கு அடுத்து, கேரள அரசின் கல்வி அமைச்சர், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதனால், பாடத் திட்டம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் அறிந்தவர். அதற்கான தீர்வுகளைக் காண முனைப்போடு செயல்படுபவர். எல்லோரும் தொடர்புகொள்ளும் வகையில் எளிமையானவர். ஒரு சிறுமி அவரை நேர்காணல் எடுத்த வீடியோ கேரள மக்கள் அனைவராலும் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. நான் அங்கு பணிபுரியும் காலத்தில், அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன். மாணவர்கள் நலன் சார்ந்த மிக நல்ல மாற்றங்கள் கேரளாவில் நிகழ்ந்துவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தொடக்கப் பணிகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி." என்கிறார் ராஜேந்திரன் தாமரபுரா.(ராஜேந்திரன் தாமரபுரா, 30 ஆண்டுகளுக்கு மேல், கேரளா பாடத்திட்டக் குழுவில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவர். மிக ஆரோக்கியமான பல முயற்சிகளை முன்னெடுத்தவர். தற்போது நீள் கதை பாடத்திட்டம் எனும் கற்பித்தல் முறைமையை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறார்.)

அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் செல்லும் சூழலை கேரள அரசு உருவாக்கியதைப் போல தமிழக அரசும் ஏற்படுத்துமா??

Post Top Ad