பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 4, 2019

பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு





பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா செல்ல தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் டி.யோகேஷ், பிளஸ் 1 மாணவர் எம்.ராஜா ஆகிய இருவரும் பின்லாந்து நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2015-இல் திருச்செங்கோடு மற்றும் 2017-இல் மதுரையில் நடைபெற்ற 43, 45-ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். மேலும், இவர்கள் இருவரும் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். தமிழகத்தில், இக் கண்காட்சிகளில் சிறந்த படைப்புகளை படைத்து சிறப்பிடம் வகித்த 50 மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பின்லாந்து நாட்டுக்கு 13 நாள்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் வரும் 20-ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்து செல்ல உள்ளனர்.


இதற்காக வரும் 19-ஆம் தேதி தருமபுரியிலிருந்து இரு மாணவர்களும் சென்னைக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில், கல்வி சுற்றுலாவுக்கு தேர்வான இவ்விரு மாணவர்களையும், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இதில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கவுதமன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்பெலிக்ஸ், அறிவியல் ஆசிரியர்கள் அரவிந்தன், ருத்ரத்அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post Top Ad