ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 24, 2019

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு




தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், உபரியாக உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கியுள்ள மழலையர் எல்கேஜி , யுகேஜி வகுப்புகளில் பணி அமர்த்துமாறு 2018 டிசம்பர் 11-இல் சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 89-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி முடிக்காத, இடைநிலை ஆசிரியர்கள் எவ்வாறு இந்த வகுப்புகளை எடுக்க முடியும். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில்தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்கக் கல்வியில் இருந்து , சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் .
மேலும் இது தொடர்பாக சமூக நலத்துறையின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Post Top Ad