வண்ணங்களால் அரசுப் பள்ளிகளின் சுவரை அலங்கரிக்கும் தமிழ் ஆசிரியர்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 25, 2019

வண்ணங்களால் அரசுப் பள்ளிகளின் சுவரை அலங்கரிக்கும் தமிழ் ஆசிரியர்!








அரசுப் பள்ளி என்றதுமே உங்களின் கண் முன் என்ன உருவம் வருகிறது?" மஞ்சள் நிறக் கட்டடம்தானே? ஆம். நீங்கள் படித்தபோது மட்டுமல்ல, பல அரசுப் பள்ளிகள் இன்றும் அதே வண்ணத்தில்தான் இருக்கின்றன. இதைப் பார்த்ததும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுமா என்பது சந்தேகமே! அதை மனத்தில் கொண்டுதான் ஆசிரியர் ராஜசேகரன் தன் நண்பர்களோடு வண்ணமயமான பணியை மேற்கொண்டு வருகிறார்.
தேனி மாவட்டம், அல்லிநகரம், அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்தான் ராஜசேகரன். அவர், தான் பணிபுரியும் பள்ளியின் தோற்றத்தை மாற்ற நினைத்தார். அவரின் சக ஆசிரியர் செந்திலுடன் ஆலோசித்து, வித்தியாசமான ஒரு தோற்றத்தை அப்பள்ளிக்கு அளித்திருக்கிறார். அது குறித்து, ஆசிரியர் ராஜசேகரனிடம் பேசினேன்.

அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சி

``இந்தப் பள்ளிக்கு முன், நான் திருப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த பள்ளியில், புதிய வண்ணம் தீட்டியிருந்தார்கள். இயல்பாக எனக்கு வரைவதில் ஆர்வம் இருப்பதால், சில ஓவியங்கள் வரைந்திருந்தேன். அதைப் பார்த்த மாணவர்கள் சந்தோஷமாக, அதனருகில் விளையாடினார்கள். வழக்கமாக ஒரு நிறத்தில் இருக்கும் சுவரை விட, இப்படி அவர்களை ஈர்க்கும் விதத்தில் மாற்றும் ஐடியா வந்தது. அதை என் ஆசிரிய நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர்களும் ஆர்வத்துடன் என்னுடன் இணைந்துகொண்டனர். அப்படி உருவானதுதான் `பட்டாம்பூச்சிகள் அரசுப் பள்ளிகளைக் காப்போம்' இயக்கம்.

எங்களுக்குத் தெரிந்த பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வோம். அந்தப் பள்ளியின் சுவரில் புதிய வண்ணம் தீட்டி, மாணவர்களுக்குப் பிடித்த உருவங்களை, அதே நேரத்தில் அவர்களுக்குப் பயன்தரும் ஓவியங்களாக வரைவோம். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்தும் என்ன வரையலாம் என்ற முடிவுக்கு வருவோம். நாங்களாக எதையும் திணிப்பதில்லை. ஒரு பள்ளியில் சாலை விதிகளை விளக்கும் படங்களை வரைந்திருந்தோம். அங்கு, வகுப்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஆசிரியர் பாடம் நடத்துகையில் நாங்கள் வரைந்த படங்களைப் பார்த்து, மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனராம். மேலும், அப்படங்களில் இல்லாத விதிகளை விளக்கும் படங்களை வரையச் சொல்லி ஆசிரியரிடம் கேட்கவும் செய்தார்களாம். இதுவே எங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.

அரசுப்பள்ளி ஆசிரியர்நான் இந்த ஆண்டில் பணி மாற்றலாகி, வந்து சேர்ந்ததுதான் இந்தப் பள்ளி. இங்கும் எங்களின் வண்ணப் பணியைத் தொடரலாம் என்று முடிவெடுத்தோம். பள்ளியின் ஆசிரியர் செந்தில் தந்த ஐடிதான் நூலகத்தினைப் போன்ற ஓவியங்கள். அதற்காக, பல நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம். திருக்குறள், பாரதியார் கவிதைகள் என்ற நூல்களோடு தற்காலத்தில் வெளிவந்துள்ள சிறுவர் நூல்களும் அலமாரியில் அடுக்கி வைத்திருப்பதுபோன்ற ஓவியங்களை வரைந்தோம். நாங்கள் வரையும்போதே மாணவர்களும் ஓடிவந்து உதவிகள் செய்தனர். ஓவியம் முடிந்ததும் ரொம்பவே உற்சாகமாக இருந்தனர்.
என்னைப் பொறுத்தவரை மாணவர்களை மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரவைக்க, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பல வழிகளில் ஆசிரியர்கள் யோசித்துச் செயல்படுத்த வேண்டும். அந்த முயற்சிகளைப் பார்க்கும் பெற்றோர்களும் அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் முடிவுக்கு வருவார்கள். இப்படித்தான் தேனி அருகே ஒரு பள்ளியில் நாங்கள் ஓவியங்களை வரைந்திருந்தோம். அந்தப் பள்ளியின் ஆசிரியர் இன்னும் சில முயற்சிகளை எடுத்திருந்தார். அதனால், மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. இதுபோன்ற பலன்கள் கிடைத்தன எனும் செய்திதான் எங்களை நம்பிக்கையுடன் இயங்க வைக்கிறது" என்கிறார் ஆசிரியர் ராஜசேகரன் புன்னகையோடு.

அரசுப் பள்ளிகளைக் காக்க நினைக்கும் எண்ணம் நிறைவேறட்டும்.

Post Top Ad