Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

"மாணவக்கண்மணியே! எப்படியிருக்கிறாய்?" - 8 நாள் போராட்டத்திற்கு பிறகு தன் மாணவர்களுக்கு அரசுப்பள்ளி ஆசிரியை எழுதிய மனம் திறந்த மடல்!

வல்லம் அரசு மகளிர் மே.நி.பள்ளி முதுகலை தமிழாசிரியை எழுதிய கவிதை - மனம் திறந்த மடல்! எங்கள் மாணவக்கண்மணியே! எப்படியிருக்கிறாய்?எங்கள் மாணவக்கண்மணியே! 
எப்படியிருக்கிறாய்? 
எட்டுநாட்களாய் எங்களைப் பார்க்காமல்
 எப்படியிருக்கிறது பொழுது? 
முதல்நாள் எங்களின் 
வராமையைக் கொண்டாடியிருப்பாய்! 
அடுத்தநாள் கவலை கருக்கொள்ள 
கண்கள் எங்களைத் 
தேடியிருக்கும்! 


'செய்முறைத் தேர்வின் 
வாயிலில் நிற்கிறோமே 
வழக்கம் போல் கைப்பிடித்து 
அழைத்துப்போகாமல் காலடியில் 
அமர்த்தி சொல்லித் தராமல் 
எங்கே போய்விட்டார்கள் இவர்கள்?' 
மூன்றாம் நாள் 
எங்கள்மேல் கோபம் 
கொப்பளித்திருக்கும்! நான்காம் நாள் 
தேர்வுபயம் வந்து கலங்கியிருப்பாய்! 
நாங்கள் வந்துவிட மாட்டோமா? 
என்று ஏங்கியிருப்பாய்! 


'வாங்குற சம்பளம் 
பத்தலேன்னு வரிசைகட்டி 
நிக்கிறதப் பாரேன்!' 
புரியாமையில் 
எங்கள்மேல் 
வந்துவிழும் குப்பைப் பேச்சுகளைக் 
கேட்டு குழம்பியிருப்பாய்! 
எங்கள் கண்மணியே! யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும்! 
பணத்திற்காக அலையும் 
பதர்களல்ல நாங்கள் 
என்பதை அறிவாய் நீ! 
ஆனாலும் சிலவற்றைச் 
சொல்லியாக 
வேண்டும் உன்னிடம்! அதற்குத்தான் இந்த மடல்! 
நாங்கள் சம்பளத்திற்காகப் 
போராடவில்லை! 


உனக்கும் சேர்த்து நம் 
உரிமைகளுக்காகப் போராடுகிறோம்! 
ஐம்பத்தெட்டு வயதுவரை 
அரசிற்குக் குருதியிரைத்து 
விட்டு அறுபதுவயதில் அகதியாய் 
அடுத்தவனிடம் கையேந்தி 
நிற்கும்நிலை எங்களுக்கும் 
எங்களுக்குப் பிறகு 
உங்களுக்கும் வந்துவிடக் கூடாது 
என்பதற்காகப் போராடுகிறோம்! ஏழைக் குழந்தைகளின் 
இரண்டாவது தாயாய் 
இருந்து பசியாற்றும் 
சத்துணவுக்கூடங்கள் 
எண்ணிக்கையில் குறைந்து 
இறந்துவிடக் கூடாது 
என்கின்ற பயத்தில்தான் இறங்கிவந்து
போராடுகிறோம்! ஆள்வோர்க்கு ஒரு நீதி 
அலுவலர்க்கு ஒரு நீதி 
என்ற ஓரவஞ்சனையை 
ஓரங்கட்டுவதற்குவதற்குதான் 
ஓடிவந்து போராடுகிறோம்! அங்கன்வாடிகளில் மட்டுமே 
நிகழ்ந்துகொண்டிருக்கும் 
அன்னைத் தமிழ்வழி 
ஆரம்பக் கல்வியையும் 
அறுத்தெறிய நினைக்கும் 
ஆதிக்கமூளைகளின் 
அகோரமுகம் கிழித்து 
அறம் கேட்டுப் போராடுகிறோம்! 
அறிவை,அறத்தை உழைப்பை,
உண்மையை மதிக்கத் தெரியாத 
ஒரு மண்ணாங்கட்டி 
அரசின்கீழ் எங்களைப் 
போலவே உரிமைகள் 
மறுக்கப்பட்டு நீயும் 
கிடந்துவிடக்கூடாது 
என்பதற்காகவே போராடுகிறோம்! நேற்றுவரை வரம் கொடுக்கும் 
தேவதைகளாக வகுப்பில் 
உங்கள்முன் நின்ற நாங்கள் 
மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக 
மல்லுக்கட்டி நிற்கிறோம் 
வீதிகளில்! காலையில் மறியல்! 


மதியம் கைது! இரவில் விடுதலை! 
இதுதான் எங்களின் 
ஒரு வார வாழ்க்கை! 
எப்படியாவது உன் 
திருப்புதல்தாளைத் திருத்திவிட 
வேண்டுமென்று அங்குமிங்கும் 
தூக்கிக் கொண்டு அலைகிறோம் 
கங்காருக்குட்டியைப் போல்! 


பிறந்தவீட்டுப் பாசத்தை 
மனம் நிறையச் சுமந்து 
புகுந்த வீட்டில் அடைபட்டுக் 
கிடக்கும் பெண்ணைப் போல 
தினம் தினம் உன் முகத்தை 
நினைத்துக் கொண்டே 
கைதாகி மண்டபங்களில் 
அடைபட்டுக் 
கிடக்கிறோம் நாங்கள்! நல்லவேளை பாடம் 
முடித்துவிட்டோம்! ஓரளவு 
படிக்க வைத்துவிட்டோம்! 
செய்முறை திருத்திவிட்டோம்! 
அகமதிப்பெண் போட்டுவிட்டோம்! 
பேருந்துஅட்டை 
கொடுத்து விட்டோம்! 
மிதிவண்டிக் கணக்கு 
முடித்துவிட்டோம்! 
சாதிச்சான்று வருமானச் 
சான்று பிறப்புச் சான்று 
வாங்கிவிட்டோம்! 
ஆதார்எண் ஏற்றிவிட்டோம்! 


எம்மீஸ்எண் ஏற்றிவிட்டோம்! 
வங்கிக் கணக்குநகல் வாங்கிவிட்டோம்! 
பொதுத் தேர்விற்கு 
உன் விடைத்தாள் 
முகப்புச்சீட்டிற்கு 
அத்தனையும் சரிபார்த்து 
பதிவேற்றம் செய்து 
விட்டோம்! ஆனாலும் 
எங்கள் காலடியில் அமர்ந்து 
கரையேறத் திணரும் 
கண்மணிகளை நினைத்துத்தான் 
கவலையாக இருக்கிறது! 


எங்கள் மாணவக் கதிரே! 
அவ்போது மூர்சையாகும் 
அனிதா... 
அரட்டைக் கச்சேரி வனிதா... 
கவலைக்கிடமாய் கவிதா... 
கரையேறத் திணரும் கனிமொழி... 
இப்படி எல்லோரையும் 
அடையாளம் காட்டிவிட்டுத்தான் 
வந்திருக்கிறோம் பயிற்சி 
ஆசிரியர்களிடம்! 


ஊருக்கு சென்ற தாய் 
திரும்பி வரும் வரை 
பக்கத்து வீட்டில் பணிவாய் 
இருக்கும் பிள்ளையைப் 
போல் பணிவாய் 
இருந்து படித்துக் 
கொள் பயிற்சியாசிரியர்களிடம்! 
உன் சேட்டைகளைக் 
காட்டி அவர்களை 
பயமுறுத்திவிடாதே! இவையெல்லாம் 
உனக்குப் புரியாவிட்டாலும் 
உன் ஆசிரியத் தாய்கள் 
உனக்குத் தீங்கு செய்யமாட்டார்கள் 
என்பதை மட்டும் திடமாய் நம்பு! நம்முடைய இந்தப் பிரிவும் 
ஒரு நல்லதுக்கு என்றே 
நினைத்துக் கொள்வோம்! 
நாங்களின்றி நீ இயங்க 
கற்றுக் கொள்! 


கைது செய்யப் படாத 
மாலை நேரங்களில் 
உன்னை ஆயத்தப்படுத்த 
மாறி மாறி வருவோம்! அ
துவரை காத்திருப்பாய் 
எங்கள் கண்மணியே! 

More

 

Most Reading

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்