22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்:ஜாக்டோ ஜியோ - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 17, 2019

22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்:ஜாக்டோ ஜியோ

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில், 12 லட்சம், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதால், பொது தேர்வு மற்றும் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ சார்பில், 2011 முதல், தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும், அரசு தரப்பில் பேச்சு நடத்தி, போராட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.'பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் வர வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ முன்வைத்துள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டு போராட்டத்தின் போது, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி காலாவதியானதால், ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, சங்கங்களின் கருத்துகளை கேட்டது.
ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 2018 நவ., 27ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான, சித்திக் கமிட்டியின் அறிக்கை, ஜன., 5ல், அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைகள் வந்த பின்பும், அரசு தரப்பில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான, தியாகராஜன் கூறியதாவது:ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விசாரணைக்கு வந்தபோது, எங்களின் கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு தரப்பில், எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தள்ளி வைப்பதாக, உயர் நீதிமன்றத்தில், ஜாக்டோ ஜியோ அளித்திருந்த வாக்குறுதி, திரும்ப பெறப்பட்டது. திட்டமிட்டபடி, 22ம் தேதி முதல், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, இறுதி முடிவு எடுத்துள்ளனர். இது குறித்து, அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும். 20ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின், 22ம் தேதி முதல், பணிகளை புறக்கணித்து, முழு வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளோம். போராட்டத்தின் போது, 23ம் தேதி முதல், தாலுகா வாரியாக மறியல் போராட்டமும், 26ம் தேதி முதல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த போராட்டத்தில், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் உட்பட, 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதனால், பள்ளி பொது தேர்வு பணிகளும், அரசு துறைகளின் அன்றாட பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post Top Ad